உலக மகளிர் தினம் கொண்டாட்டம்: ‘‘வீட்டை காப்பது போல சமுதாயத்தையும் பெண்கள் காக்க வேண்டும்’’


உலக மகளிர் தினம் கொண்டாட்டம்: ‘‘வீட்டை காப்பது போல சமுதாயத்தையும் பெண்கள் காக்க வேண்டும்’’
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 8 March 2017 6:35 PM GMT)

‘‘வீட்டை காப்பது போல சமுதாயத்தையும் பெண்கள் காக்க வேண்டும்’’ என உலக மகளிர் தின விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீனா பேசினார். மகளிர் தின விழா திருச்சி அனைத்து மகளிர் சங்கங்கள் மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி சார்பில

திருச்சி,

‘‘வீட்டை காப்பது போல சமுதாயத்தையும் பெண்கள் காக்க வேண்டும்’’ என உலக மகளிர் தின விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீனா பேசினார்.

மகளிர் தின விழா

திருச்சி அனைத்து மகளிர் சங்கங்கள் மற்றும் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி சார்பில் உலக மகளிர் தின விழா மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீனா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம். பெண்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். இதற்கு காரணம் உடல் உழைப்பு குறைந்து வருவது தான். எனவே பெண்கள் சத்தான உணவை சாப்பிட வேண்டும். இன்றைய காலத்தில் 15 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு ரத்தத்தில் ‘ஹீமோகுளோபின்’ அளவு மிக குறைவாக இருக்கிறது. எனவே ஒவ்வொரு பெண்களும் பெண் குழந்தை உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சமுதாயத்தை காக்க...

பெண்களாகிய நாம் வாய்ப்பை தேடி செல்லாமல் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். உங்களுக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களை முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் ஜெயித்து காட்டுங்கள். எதையும் போராடி தான் ஜெயிக்க முடியும். தானாக வந்து விடாது. எனவே தயக்கம் இருந்தால் அதனை தூக்கி எறிந்து விடுங்கள். அதே போன்று வீட்டை காக்கும் நாம் இந்த சமுதாயத்தையும் காக்க வேண்டும். அக்கம், பக்கம் என்ன நடந்தாலும் துணிவுடன் தட்டிகேட்கும் மனப்பான்மை வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

டி.ராஜேந்தர்

விழாவில் லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசுகையில்,‘‘உண்மை என்றால் அது பெண்மை. ஆண் என்ன தான் ஓடியாடி வேலை செய்து வந்தாலும் தனது சுமையை இறக்கி வைப்பான். ஆனால் பெண் மட்டும் தான் எத்தனை வலி வந்தாலும் 10 மாதம் சுமையை தாங்கி கொள்கிறாள்.

இப்படி படுத்தால் குழந்தை தலை வலிக்குமோ? என்று ஒவ்வொரு அசைவையும் பார்த்து, பார்த்து இருப்பவள். அவள் தான் சுமை தாங்கி. படைத்த பிரம்மாவை நாம் பார்க்க முடியவில்லை. ஆனால் நம்மை பெற்ற தாயை பார்க்க முடியும். எனவே பெண் இல்லை என்றால் உலகமே இல்லை’’ என்றார்.

சிறந்த பணிக்கான விருது

விழாவில் பிரபல கன்னட பாடகி விஷாகா ஹரி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சிறந்த பணிக்கான விருதுகளை சமூக சேவகர் கலாவதி, ஸ்டேட் வங்கியின் திருச்சி டவுன் கிளை முதன்மை மேலாளர் ரேணுகா ஆகியோருக்கு வழங்கப்பட்டன. விழாவில் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியின் முதல்வர் வித்யாலட்சுமி, அனைத்து பெண்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ஜெம்பகா ராமகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி கணினி பயன்பாட்டு துறை இயக்குனர் மணிமேகலை வரவேற்று பேசினார். இதேபோல திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மகளிர் தின வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.


Next Story