பொள்ளாச்சி–கிணத்துக்கடவு இடையே ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம்


பொள்ளாச்சி–கிணத்துக்கடவு இடையே ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 8 March 2017 10:15 PM GMT (Updated: 8 March 2017 6:58 PM GMT)

அகல ரெயில் பாதையில் தண்டவாளம் உறுதியாக இருக்கிறதா? பொள்ளாச்சி–கிணத்துக்கடவு இடையே ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம்

கிணத்துக்கடவு,

போத்தனூர்–பொள்ளாச்சி மீட்டர் கேஜ் ரெயில் பாதை கடந்த 2009–ம் ஆண்டு இறுதியில் அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணிக்கு 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து கிணத்துக்கடவில் ரூ.2¼ கோடி செலவில் புதிய ரெயில் நிலையம், 3 ரெயில்கள் நிற்கும் வகையில் தண்டவாளங்கள், 2 பிளாட்பாரங்கள், ரெயில் நிலையம் உயரமான பகுதியில் அமைந்து இருப்பதால் படிக்கட்டுகள் அமைக்கும் பணியும் நடந்தது.

கிணத்துக்கடவு–பொள்ளாச்சி செல்லும் வழியில் ரெயில்வே தண்டவாளம் சுமார் 33 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக இந்த பகுதியில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணிக்கு கூடுதல் நிலம் தேவைப்பட்டதால் ரெயில்வே நிர்வாகம் செட்டிப்பாளையம், கிணத்துக்கடவு, சொலவம்பாளையம், நல்லட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் 43 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அதற்கு இழப்பீடு தொகையாக ரூ.8 கோடி நில உரிமையாளர்களுக்கு வழங்கியது.

நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் அடைந்ததால் அகல ரெயில்பாதை அமைக்கும் பணியும் தாமதமானது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்ததால் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடந்தது.

3 கட்டமாக ஆய்வு

போத்தனூர்–பொள்ளாச்சி இடையான 38½ கிலோ மீட்டர் தூரம் அகல ரெயில்பாதைக்காக தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அகல ரெயில் பாதையில் உள்ள தண்டவாளம் உறுதியாக இருக்கிறதா? சிலிப்பர் கட்டைகள் உறுதியாக இருக்கிறதா? என்பது பற்றி அறிய ரெயில்வே அதிகாரிகள் 3 கட்டமாக நவீன எந்திரங்களை கொண்டு ஆய்வு நடத்தினார்கள்.

தற்போது கிணத்துக்கடவில் இருந்து செட்டிப்பாளையம் வரை ரெயில்வே தண்டவாளம் சுமார் 60 அடி பள்ளத்தில் செல்கிறது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பாதை கடும் பாறைகள் சூழ்ந்தது ஆகும். இந்த பகுதியில் அகல ரெயில் பாதை பணிக்காக தண்டவாளம் அமைக்கும் பணி தொய்வு ஏற்பட்டது. தற்போது இந்த பகுதியில் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இன்னும் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இதை தொடர்ந்து 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாளம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

ரெயில் என்ஜின் இன்று சோதனை ஓட்டம்

தற்போது கிணத்துக்கடவு, முள்ளுப்பாடி பகுதியில் சிக்னல்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரை இன்று காலை 10.30 மணிக்கு ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது. இந்த சோதனை ஓட்டம் துணை தலைமை பொறியாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். அப்போது ரெயில் என்ஜினில் பயணம் செய்யும் அதிகாரிகள் புதிதாக அமைக்கப்பட்ட ரெயில்வே தண்டவாளங்கள் உறுதியாக இருக்கிறதா? என்று பரிசோதிக்கின்றனர்.

இந்த சோதனை ஓட்டம் பொள்ளாச்சி, கோவில்பாளையம், தாமரைக்குளம், கிணத்துக்கடவு, அரசம்பாளையம் வரை நடைபெறுகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் இன்று பார்க்கிறார்கள்.


Next Story