லாரியில் ஏற்றும்போது குப்பை தொட்டி விழுந்து துப்புரவு தொழிலாளி நசுங்கி சாவு


லாரியில் ஏற்றும்போது குப்பை தொட்டி விழுந்து துப்புரவு தொழிலாளி நசுங்கி சாவு
x
தினத்தந்தி 8 March 2017 10:30 PM GMT (Updated: 8 March 2017 6:58 PM GMT)

லாரியில் ஏற்றும்போது குப்பை தொட்டி விழுந்து துப்புரவு தொழிலாளி நசுங்கி சாவு அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளர்கள் முற்றுகை

கோவை,

எந்திரம் மூலம் குப்பை தொட்டியை லாரியில் ஏற்றியபோது, துப்புரவு தொழிலாளி மீது குப்பை தொட்டி விழுந்து பலியானார். உரிய நடவடிக்கை எடுக்க கோரி, அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளர்களும், உறவினர்களும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துப்புரவு தொழிலாளி

கோவை தெற்கு உக்கடம் சி.எம்.சி. காலனி, பூமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சாமிநாதன் என்பவருடைய மகன் ரமேஷ்(வயது 29). இவர் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று காலை 9 மணியளவில் கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு பகுதியில் குப்பை தொட்டியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ரமேஷ் ஈடுபட்டு இருந்தார். அப்போது குப்பை தொட்டியை லாரியில் ஏற்ற ‘ஹைட்ராலிக்’ எந்திர உதவியுடன் பணி மேற்கொள்ளப்பட்டது.

அரை டன் எடையுள்ள இரும்பு குப்பை தொட்டியை எந்திரத்தின் உதவியுடன் லாரி டிரைவர் பிரவீன்குமார் மேலே தூக்கி லாரியில் ஏற்ற முயன்றார்.

தொழிலாளி நசுங்கி சாவு

திடீரென்று எந்திரத்தின் மேலே இருந்த இரும்பு சங்கிலி அறுந்து குப்பை தொட்டி தொழிலாளி ரமேஷ் மீது விழுந்து அமுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரமேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதனால் மணிக்கூண்டு பகுதியில் பொதுமக்கள் திரண்டார்கள். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து ரமேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு ஆஸ்பத்திரியில் முற்றுகை

ரமேஷ் பலியான தகவல் அறிந்ததும், அவரது உறவினர்களும், கோவை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களும் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். திடீரென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பலியான ரமேஷ் குடும்பத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும், அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். துப்புரவு தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும், குப்பை அள்ளும் லாரிகள் பராமரிப்பு இல்லாததால் ஆபத்தானவையாக உள்ளது என்றும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உறுதி மொழி அளித்தால் மட்டுமே ரமேசின் உடலை வாங்கிச்செல்வோம் என்றும் கூறினார்கள்.

போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ரமேசின் குடும்பத்துக்கு நிவாரண தொகை வழங்கப்படுவதுடன், மாதந்தோறும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் ரமேசின் உடலை பெற்றுச்சென்றனர்.

தொழிலாளி ரமேஷ் இறந்தது குறித்து, கோவை மேற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, லாரி டிரைவர் பிரேம்குமார்(29) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

துப்புரவு தொழிலாளி மீது குப்பை தொட்டி விழுந்து இறந்த சம்பவம், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story