குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 6 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி


குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 6 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 8 March 2017 10:15 PM GMT (Updated: 8 March 2017 7:03 PM GMT)

கோத்தகிரி நகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 6 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுபுறப்பகுதிகளில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தாலும், போதிய மழை பெய்யாததாலும், நீர்நிலைகள், தடுப்பணைகள் வறண்டன. இதனால் கோத்தகிரியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் மூலம் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதையொட்டி பேரூராட்சிக்கு கணிசமான செலவு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.10 கோடியே 60 லட்சம் செலவில் அளக்கரை கூட்டு குடிநீர் திட்டப்பணி தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணி இன்னும் நிறைவு பெறவில்லை. அதே போல ரூ.40 லட்சம் செலவில் ஈளாடா தடுப்பணை தூர்வாரும் பணியும் நடந்து வருகிறது.

6 இடங்கள்

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி நிவாரண திட்டம் மூலம் நிதி ஒதுக்கி ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆழ்துளை கிணறுகள் அமைக்க 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. தொடர்ந்து அதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதன்படி கோத்தகிரி பேரூராட்சி விருந்தினர் மாளிகை, நேரு பூங்கா, ஆர்.சி.சர்ச் சாலை, மார்க்கெட், ஓரசோலை, நெக்கிகம்பை ஆகிய இடங்களில் ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து கோத்தகிரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கண்ணன் கூறியதாவது:–

செலவு குறையும்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 6 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைப்படி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆறு அங்குல அகலத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் முழுமையடைந்தால் இங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீரை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நிரப்பி குழாய்கள் மூலமாகவே குடிநீரை வினியோகம் செய்ய முடியும். இதனால் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய பேரூராட்சிக்கு ஆகும் செலவு குறைவதுடன், குடிநீர் தட்டுப்பாடு நீங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story