ஊட்டியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்


ஊட்டியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
x
தினத்தந்தி 8 March 2017 10:00 PM GMT (Updated: 8 March 2017 7:03 PM GMT)

ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை நேற்று நகராட்சி, வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினார்கள்.

ஊட்டி,

ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி சுகாதார பிரிவு சார்பில் தொற்று நோய் சிகிச்சை மையம் செயல்பட்டு வந்தது. நாளடைவில் இந்த மையம் செயல்படாமல் போனது. அதன் அருகில் இருந்த குடியிருப்பில் அந்த மையத்தில் பணியாற்றியவர்கள் தங்கி இருந்தனர். அவர்களும் வெளியேறியதால் குடியிருப்புகள் காலியாக இருந்தன.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு அந்த குடியிருப்புகளிலும், அதன் இருந்த காலி இடங்களில் வீடுகளை கட்டியும் சிலர் குடியேறினார்கள். அவர்கள் 50 ஆண்டுகளாக அந்த பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே தற்போ அந்த இடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அதன் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

அகற்றம்

இதன்படி நகராட்சி நிர்வாகத்தினரும், வருவாய்த்துறையினரும் ஆக்கிரமிப்பு செய்து குடியேறி உள்ள வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினார்கள். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு உத்தரவின்படி ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நேற்று காலை ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயன், நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) பிரபாகர், போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர், நகராட்சி அதிகாரிகள், போலீசார் அங்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 6 வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள்.

கடும் நடவடிக்கை

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும் போது, பிங்கர்போஸ்ட் பகுதியில் வருவாய்த்துறை இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. நகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story