ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம்


ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 8 March 2017 11:00 PM GMT (Updated: 8 March 2017 7:17 PM GMT)

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஈரோட்டில் உண்ணாவிரதம் இருந்தனர்.

ஈரோடு,

முதல் –அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, அதற்கு நீதி விசாரணை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகில் நேற்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆயிரக்கணக்கானோர் அங்கு ஒன்று திரண்டனர்.

உண்ணாவிரதத்துக்கு முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. என்.ஆர்.கோவிந்தராஜர் முன்னிலை வகித்து பேசினார். அப்போது அவர், ‘தமிழக முதல் –அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால், அதற்கு நீதி விசாரணை வேண்டி இன்று (நேற்று) தமிழகம் முழுவதும் நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்துகிறோம். எங்கள் போராட்டத்தின் மூலம் மத்திய அரசிடம் இருந்து நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையென்றால் அடுத்தகட்டமாக 3 வழிகளில் போராட உள்ளோம். அதிலும் முடிவு கிடைக்காவிட்டால் மக்களை திரட்டி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்’ என்றார்

நீதி விசாரணை

உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் ஏராளமான மர்மங்கள் உள்ளன. எனவே இதுகுறித்து உடனடியாக நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று ஆவேசமாக பேசினார்கள். மேலும் சிலர், ‘போயஸ் கார்டனில் நடந்தது என்ன?, ஜெயலலிதா மரண செய்தியை அறிவிக்க ஜோசியரிடம் நாள் குறித்த பின்னணி என்ன?, மூத்த தலைவர்களை பார்க்கவிடாமல் முட்டுக்கட்டை போட்டது யார்? என்பது உள்பட பல்வேறு கேள்விகள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

இதில் முன்னாள் எம்.பி.க்கள் வி.கே.சின்னுசாமி, பி.ஜி.நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.ரமணீதரன், பாலகிருஷ்ணன், கே.எஸ்.பழனிசாமி மற்றும் தெய்வசிகாமணி, பேட்டை சின்னு, கருப்புசாமி, சோமசுந்தரம், கண்ணுசாமி, உழவர் தங்கவேவல், கே.எஸ்.சின்னசாமி, சன்ரைஸ்லோகு உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். முன்னதாக மாவட்ட இலக்கிய அணி முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் வரவேற்று பேசினார். முடிவில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.என்.கிட்டுசாமி எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.


Next Story