திருப்பூர் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி


திருப்பூர் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களுக்கு தர்ம அடி
x
தினத்தந்தி 8 March 2017 10:30 PM GMT (Updated: 8 March 2017 8:43 PM GMT)

திருப்பூர் பிச்சம்பாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் பிச்சம்பாளையத்தை அடுத்த குமாரசாமிநகரை சேர்ந்த தம்பதி, 2 வாலிபர்களை வைத்து கஞ்சா விற்று வந்ததாக தெரிகிறது. அந்த வாலிபர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள பெண்களை கிண்டல் செய்வதும், அப்பகுதி மக்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் அந்த வாலிபர்களை ஏற்கனவே பலமுறை கண்டித்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த வாலிபர்கள் 2 பேருக்கும் அந்த பகுதி பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த 2 வாலிபர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் அவர்களுடைய 2 மோட்டார்சைக்கிள்களையும் அடித்து நொறுக்கினார்கள்.

போலீசார் விசாரணை

பின்னர் அவர்களை அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைக்க முயற்சி செய்தனர். அதில் ஒரு வாலிபர் தப்பி ஓடிவிட்டார். மற்றொரு வாலிபர் மட்டும் பிடிபட்டார். அவரை பிடித்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கூறப்படும் தம்பதி தாங்கள் குடியிருந்த வீட்டை பூட்டி விட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.

அந்த பகுதி மக்கள் கூறும்போது “ இந்த பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும், இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றும் வலியுறுத்தினார்கள். திருப்பூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story