மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் மழை: அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் மழை: அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 March 2017 11:00 PM GMT (Updated: 8 March 2017 8:43 PM GMT)

கடந்த 3 நாட்களாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடும் வறட்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்றுப்பாசனம் மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் இந்த அணையை நீர்ஆதாரமாக கொண்டு 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் நிலவி வந்த வறட்சியால் அமராவதி அணைக்கு தண்ணீர் வழங்கக்கூடிய சிற்றாறுகளில் வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்தும் நின்று போனது. இதனால் அமராவதி அணையை நீர்ஆதாரமாக கொண்டு செயல்பட்டு வருகின்ற கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும் கடும் வறட்சியால் வனப்பகுதி முற்றிலுமாக வறண்டு விட்டதால் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் வனப்பகுதிகளில் உள்ள ஓடைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வருவதால் வனவிலங்குகள் குடிநீருக்காக சமவெளி பகுதிக்கு வருவது குறைந்துள்ளது. மேலும் வனப்பகுதிகளில் உள்ள சிற்றாறுகள் மூலமாக அமராவதி அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 302 கன அடியாக உயர்ந்துள்ளது .

மழையின் காரணமாக அமராவதி அணைப்பகுதியில் வெப்பம் தணிந்துள்ளதாலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அமராவதி அணைக்கு நிலையான நீர்வரத்து கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

Next Story