20 நிமிடங்களில் சென்னை செல்ல முடியும் பெங்களூரு–சென்னை இடையே ‘ஹைபர்லூப்’ ரெயில் சேவை


20 நிமிடங்களில் சென்னை செல்ல முடியும் பெங்களூரு–சென்னை இடையே ‘ஹைபர்லூப்’ ரெயில் சேவை
x
தினத்தந்தி 8 March 2017 8:53 PM GMT (Updated: 8 March 2017 8:52 PM GMT)

பெங்களூரு–சென்னை இடையே ‘ஹைபர்லூப்‘ சேவை தொடங்கப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு–சென்னை இடையே ‘ஹைபர்லூப்‘ சேவை தொடங்கப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

‘ஹைபர்லூப்‘ ரெயில் சேவை

அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், அதிவேகமாக செல்லக்கூடிய ‘ஹைபர்லூப்‘ ரெயில் சேவையை வழங்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த நிறுவனம் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இதற்கான பாதையை அமைத்து முடித்துள்ளது. அதில் மிக விரைவில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில் அந்த ரெயில் சேவை வெற்றிகரமாக அமைந்துவிட்டால், அதை இந்தியாவில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை அந்த நிறுவனம் மத்திய அரசுடன் நடத்தியுள்ளது. நாடு முழுவதும் 5 வழித்தடங்கள் மூலம் முக்கிய நகரங்களை இணைக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதில் பெங்களூரு–சென்னை இடையே இந்த பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 20 நிமிடங்களில் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சென்றடைய முடியும். அதே போல் பெங்களூரு–திருவனந்தபுரம், மும்பை–சென்னை இடையேயும் அந்த பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மும்பை–சென்னை மார்க்கத்தில் மும்பையில் இருந்து உப்பள்ளி வழியாக பெங்களூரு வந்து, பிறகு ஓசூரு, வேலூர், திருப்பெரும்புதூர் வழியாக சென்னை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மும்பை–கொல்கத்தா மார்க்கத்தில் மும்பையில் இருந்து புறப்பட்டு மங்களூரு, சென்னை, ஐதராபாத் வழியாக கொல்கத்தாவை அடையும். இதன் பயண நேரம் 220 நிமிடங்கள் ஆகும்.

திட்ட அறிக்கை

இந்த ரெயில் மணிக்கு 1,200 கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய திறன் வாய்ந்தது ஆகும். இது விமானத்தின் வேகத்தை விடவும் அதிகம் ஆகும். இந்த திட்டம் தொடர்பாக இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த நிறுவனம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப மற்றும் மின்னணு சேவை அமைப்புடன் இணைந்து திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும்.

இந்த ரெயில் சேவை குறித்து அந்த நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “இந்த ஹைபர்லூப் ரெயில் பாதுகாப்பானது, உள்ளே காற்று புகாது. காந்த ஈர்ப்பு விசை கொண்ட வாகனம், குழாயுடன் இணைத்து, மின்சார மோட்டார் மூலம் ரெயில் இயக்கப்படும்“ என்றனர். சாதாரண மக்களும் இந்த போக்குவரத்தை பயன்படுத்தக்கூடிய அளவுக்கு தான் கட்டணமும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.


Next Story