பரமேஸ்வர் அனுப்பி உள்ள நோட்டீசை ஏற்றுக்கொள்ள மாட்டோம் முன்னாள் எம்.பி. விஸ்வநாத் பேட்டி


பரமேஸ்வர் அனுப்பி உள்ள நோட்டீசை ஏற்றுக்கொள்ள மாட்டோம் முன்னாள் எம்.பி. விஸ்வநாத் பேட்டி
x
தினத்தந்தி 8 March 2017 9:02 PM GMT (Updated: 8 March 2017 9:01 PM GMT)

மாநில அரசை பற்றி விமர்சனம் செய்வதாக கூறி பரமேஸ்வர் அனுப்பி உள்ள நோட்டீசை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று முன்னாள் எம்.பி. விஸ்வநாத் கூறியுள்ளார்.

மைசூரு,

மாநில அரசை பற்றி விமர்சனம் செய்வதாக கூறி பரமேஸ்வர் அனுப்பி உள்ள நோட்டீசை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று முன்னாள் எம்.பி. விஸ்வநாத் கூறியுள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. விஸ்வநாத் மைசூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

3 பேருக்கு நோட்டீசு

முதல்–மந்திரி சித்தராமையாவை பற்றியும், அவர் தலைமையிலான மாநில அரசை பற்றியும் விமர்சனம் செய்து வருவதாக நான் உள்பட 3 பேருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் நோட்டீசு அனுப்பி உள்ளார். நாங்கள் 3 பேரும் கட்சிக்காக 40 ஆண்டுகள் சேவை செய்து உள்ளோம். கட்சியின் மேலிட தலைவர்களான ராகுல் காந்தியையோ, சோனியா காந்தியையோ நாங்கள் கிண்டலடித்து பேசவில்லை.

யாரோ ஆதாரம் இல்லாத தகவலை பரமேஸ்வருக்கு கொடுத்து உள்ளனர். அதன் அடிப்படையில் அவர் எங்கள் 3 பேருக்கும் நோட்டீசு அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசை நாங்கள் 3 பேரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். நோட்டீசு அனுப்பியதற்கு எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.

கடிதம் அனுப்பி உள்ளோம்

எங்களுக்கு நோட்டீசு அனுப்பும் உரிமை கட்சியின் மேலிடத்திற்கு தான் உள்ளது. மாநில காங்கிரஸ் தலைவருக்கு இல்லை. நாங்கள் யாரிடமும் உங்களுக்கு அதிகாரத்தை கொடுத்தது யார்? என்று கேள்வி கேட்கவில்லை. எந்த தலைவரையும் கிண்டலும் செய்யவில்லை.

மாநில அரசு நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்பதற்காக சில ஆலோசனைகளை வழங்கினோம் என்று கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேலிட பொறுப்பாளர் திக்விஜய்சிங் ஆகியோருக்கும், பாராளுமன்ற உறுப்பினரான மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் ஆகியோருக்கும் கடிதம் எழுதி அனுப்பி உள்ளோம். நாங்கள் 3 பேரும் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து சேவை செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story