கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் வாரணாசியில் மோடி 3 நாட்கள் பிரசாரம் செய்திருக்க வேண்டியதில்லை


கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் வாரணாசியில் மோடி 3 நாட்கள் பிரசாரம் செய்திருக்க வேண்டியதில்லை
x
தினத்தந்தி 8 March 2017 9:06 PM GMT (Updated: 8 March 2017 9:05 PM GMT)

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் வாரணாசியில் மோடி 3 நாட்கள் பிரசாரம் செய்திருக்க வேண்டியதில்லை என்று தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு,

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் வாரணாசியில் மோடி 3 நாட்கள் பிரசாரம் செய்திருக்க வேண்டியதில்லை என்று தேவேகவுடா கூறினார்.

முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மக்களுக்கு வெறுப்புணர்வு

குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனங்கள், மோடியை பிரதமர் ஆக்கியுள்ளன. பா.ஜனதாவில் குழப்பங்கள் இருந்தன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உத்தரவுக்கு பா.ஜனதா கட்டுப்பட்டு மோடியை ஏற்றுக்கொண்டது. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு பீகார் மாநிலத்தில் அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவரை கொல்ல சதி நடந்ததாக சிலரை போலீசார் கைது செய்தனர்.

பா.ஜனதாவினர் இல்லாத பிரச்சினைகளை உருவாக்குவதில் நிபுணர்கள். நாட்டில் 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகள் மக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. அதனால் மக்கள் பா.ஜனதாவை ஆதரித்தனர். வாஜ்பாய்க்கு நான் மிகுந்த மரியாதை கொடுக்கிறேன். அவர் பெங்களூரு நே‌ஷனல் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவருடைய பேச்சை நான் காரில் அமர்ந்தபடி கேட்டேன்.

3 நாட்கள் பிரசாரம்

மோடி பிரதமரான பிறகு இந்தியாவில் தயாரியுங்கள் உள்பட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். ஆனால் அந்த திட்டங்களின் பயன் இன்னும் பயனாளிகளை சென்றடையவில்லை. கடந்த 2¾ ஆண்டுகளில் மோடி தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால், சொந்த தொகுதியான வாரணாசியில் அவர் 3 நாட்கள் பிரசாரம் செய்திருக்க வேண்டியதில்லை.

மோடி பெரிய பெரிய கூட்டங்களில் பேசுகிறார். அவருடைய கூட்டங்களுக்கு மக்கள் லட்சக்கணக்கில் அழைத்து வரப்படுகிறார்கள். இது எனக்கு புதியது இல்லை. இந்த கூட்டங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது?. நாட்டில் மோடி மற்றும் அமித்ஷா 2 பேரும் அபூர்வ சகோதரர்களை போல் செயல்படுகிறார்கள். ஏதாவது செய்து உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்கிறார்கள்.

மீண்டும் ஆட்சியை பிடிக்க...

ஒருவேளை உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றால் மாநில கட்சிகளால் பா.ஜனதாவை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். கடந்த காலங்களில் 3–வது அணியை உருவாக்க நான் முயற்சி மேற்கொண்டேன். ஆனால் அது வெற்றி பெறவில்லை. எனக்கு பிரதமராகும் ஆசை இல்லை. மாநில அரசியலிலேயே இருப்பேன். நாட்டில் மேற்கு வங்காளத்தை தவிர மற்ற மாநிலங்களில் மாநில கட்சிகளின் பலம் குறைந்து வருகின்றன.

மம்தா பானர்ஜி கட்சியின் செல்வாக்கை குறைக்க பா.ஜனதா மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது. ஆனால் அது இன்னும் அந்த கட்சியால் சாத்தியப்படுத்த முடியவில்லை. கர்நாடகத்தில் பா.ஜனதாவினர் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

மோடி மீது மரியாதை உள்ளது

அரசியல் ஆதாயத்திற்காக சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை பா.ஜனதா கட்சி தவறாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது ஆகும். வருமான வரி சோதனை நடத்த முன் அனுமதி தேவை என்று மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுள்ளது. இது அபாயகரமானது. பிரதமர் மோடி மீது எனக்கு மரியாதை உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சொந்த பலத்தில் ஆட்சியை பிடித்தால் நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக கூறினேன். ஆனால் பா.ஜனதா சொந்த பலத்தில் ஆட்சியை பிடித்தது.

நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய பிரதமரை சந்தித்தேன். அப்போது அவர் என்னை நடத்திய விதம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அரசியலில் இதுபோன்ற கருத்துகளை கூறுவது சகஜமானது, ராஜினாமா செய்ய வேண்டாம், உங்களின் ஆலோசனைகள் தேவை என்று அவர் கூறினார். அவர் எனது கார் வரை வந்து வழியனுப்பி வைத்தார். மோடி மாறிவிட்டார் என்று நான் கருதினேன். ஆனால் சமீபகாலமாக அவர் பேசி வரும் பேச்சுகள் எனக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

பொருளாதாரத்தை பலப்படுத்தினார்

நான் அரசியலுக்கு வந்தபோது இருந்த சூழ்நிலை இப்போது இல்லை. சட்டசபை, நீதித்துறை மற்றும் அரசின் மரியாதைகள் குறைந்துவிட்டன. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேர்மையான மனிதர். நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தினார். ஆனால் அவர் எடுத்த சில முடிவுகள் அவரை சந்தேகத்துடன் பார்க்க வைத்துள்ளது. 40 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியால் 46 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.


Next Story