குமரி மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக குருந்தன்கோட்டில் 47.5 மி.மீ. பதிவு


குமரி மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக குருந்தன்கோட்டில் 47.5 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 8 March 2017 10:15 PM GMT (Updated: 8 March 2017 9:07 PM GMT)

குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக குருந்தன்கோட்டில் 47.5 மி.மீ. பதிவாகியிருந்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. பெரும்பாலும் நள்ளிரவிலும், அதிகாலையிலுமே மழை பெய்கிறது. இதுபோல் நேற்று அதிகாலையிலும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகாலை 4 மணியளவில் சாரலாக தொடங்கிய மழை நேரம் செல்லச் செல்ல சற்று அதிகமாக பெய்தது. நாகர்கோவிலில் இந்த மழை சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

இதன் காரணமாக நாகர்கோவிலில் சாலைகள் மற்றும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளித்தன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

மழை காரணமாக குமரி மாவட்டத்தில் நேற்று காலை குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியது.

குருந்தன்கோட்டில்....

ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மற்றும் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளான குருந்தன்கோடு, திற்பரப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் மழை கொட்டியது. அதிகபட்சமாக குருந்தன்கோட்டில் 47.5 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழைஅளவு (மி.மீட்டர்) வருமாறு:-

பேச்சிப்பாறை- 40.6, சிற்றார் 1- 32, சிற்றார் 2- 23.6, ஆணைக்கிடங்கு- 2, திற்பரப்பு- 36.8, நாகர்கோவில்- 34, கன்னிமார்- 1.4, பாலமோர்- 17.6.

மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நேற்று 181 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 4 அடியாக உயர்ந்தது. 61 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்மட்டம்

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக உள்ளது. சிற்றார்- 1 அணையில் 0.89 அடி தண்ணீரும், சிற்றார்- 2 அணையில் 0.98 அடி தண்ணீரும், பொய்கை அணையில் 3 அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணையில் 24.77 அடி தண்ணீரும் உள்ளது.

சகதியில் சிக்கிய மினி லாரி

நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே பாதாள சாக்கடைக்காக தோண்டிய குழிகள் பாதி மூடியும் பாதி மூடாமலும் இருக்கிறது. நாகர்கோவிலில் நேற்று அதிகாலை மழை பெய்ததால் அந்த குழியில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்பட்டன. இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியின் பின்புற டயர் எதிர்பாராத விதமாக சகதியில் சிக்கியது.

மினி லாரியை இயக்க டிரைவர் போராடினார். ஆனால் முடியவில்லை. அதைத்தொடர்ந்து மினி லாரியில் இருந்த பொருட்கள் வேறு வாகனத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு வாகனத்தை இயக்கிய போது மினி லாரி சகதியில் இருந்து வெளியே வந்தது.


Next Story