எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை தொடங்கியது: தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு


எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை தொடங்கியது: தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 8 March 2017 9:07 PM GMT)

எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை நேற்று தொடங்கியது. நாகர்கோவிலில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் ஆய்வு மேற்கொண்டார்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 30-ந்தேதி வரை நடக்கிறது. குமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு நாகர்கோவில், குழித்துறை மற்றும் தக்கலை ஆகிய 3 கல்வி மாவட்டங்களில் மொத்தம் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான நேற்று தமிழ் பாடத்துக்கான தேர்வு நடந்தது.

நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 8,318 மாணவ-மாணவிகளும், குழித்துறை கல்வி மாவட்டத்தில் 8,035 மாணவ-மாணவிகளும், தக்கலை கல்வி மாவட்டத்தில் 9,130 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 25,483 பேர் தேர்வு எழுத இருந்தனர். இவர்களில் 231 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதைத்தொடர்ந்து 25,252 பேர் நேற்று தேர்வு எழுதினார்கள்.

மலையாளத்தில்...

தமிழகத்தில், மொழி பாடமாக பிற மாநில மொழியை விரும்பி படித்தவர்கள் அந்த மொழியிலேயே தேர்வு எழுதி கொள்ளலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் மலையாளத்தை மொழி பாடமாக எடுத்து படித்த மாணவ-மாணவிகளுக்கு நேற்று மலையாளத்திலேயே வினாத்தாள் வழங்கப்பட்டது.

முன்னதாக தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளை பெற்றோர் ஆசிர்வதித்தனர். மேலும் ஆசிரியர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கலெக்டர் ஆய்வு

தேர்வு நடந்த ஒவ்வொரு மையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பணிக்காக 210 பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். மேலும் கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினரும் தேர்வு மையத்தில் ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே நாகர்கோவில் கோட்டாரில் உள்ள கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்துக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், “குமரிமாவட்டத்தில் பார்வையற்ற மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக, அவர்கள் சொல்வதை எழுதுவதற்காக 89 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுகளை கண்காணிப்பதற்காக 210 பறக்கும் படை அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வுகள் சிறப்பாக நடந்திட போலீசாரும், பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டு, கண்காணித்து வருகிறார்கள்” என்றார்.

ஆய்்வின்போது முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ராதாகிருஷ்ணன், சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் விஜயக்குமார், முதன்மை கண்காணிப்பாளர் மேரி ஹெலன்பிரேமா ஆகியோர் உடன் சென்றனர்.

இதுபோல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) பாலா, மாவட்டத்தில் பல்வேறு தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.


Next Story