ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு நீதி விசாரணை நடத்த வேண்டி உண்ணாவிரதம்


ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு நீதி விசாரணை நடத்த வேண்டி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 8 March 2017 11:00 PM GMT (Updated: 8 March 2017 9:08 PM GMT)

ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு நீதி விசாரணை நடத்த வேண்டி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தஞ்சையில் நேற்று உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து மத்திய அரசின் நீதி விசாரணை நடத்த வேண்டி முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோளுக்கிணங்க தமிழகம் முழுவதும் நேற்று உண்ணா விரதப்போராட்டம் நடைபெற்றது. அதே போல் தஞ்சையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது.

உண்ணாவிரதப்போராட்டத்துக்கு வக்கீல் எம்.எஸ்.ஆனந்த் தலைமை தாங்கினார். பண்ணைவயல் தியாகராஜன், பூவை கலியமூர்த்தி, சுமங்கலி குமார், திருவோணம் கந்தசாமி, வக்கீல் உதயகுமார், உரந்தை செல்வம், பஸ்ஸ்டாண்ட் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேச்சாளர் வீரக்கனல் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார்.

11 கேள்விகள்

செப்டம்பர் 22-ந்தேதி போயஸ்கார்டனில் நடந்தது என்ன? அங்கு இருந்தவர்கள் யார்? யார்? ஜெயலலிதாவை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் என்ன? இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள மெய்யக்காவலர்கள் ஜெயலலிதாவோடு மருத்துவமனைக்கு கூட வருவதற்கு அனுமதி மறுத்த அதிகாரம் படைத்தவர்கள் யார்?, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களை பார்க்க அனுமதிக்காதது ஏன்? என்பன உள்ளிட்ட 11 கேள்விகள் உண்ணாவிரதப்போராட்டத்தில் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் கண்ணை அய்யாரப்பன், மாசிலாமணி, திருமுருகன், இமயம்சேகர், கோவி.ரவி, சிறுபான்மை பிரிவு டோமினிக், ஹபீப்ரகுமான், வல்லம் தம்பிதுரை, சேகர், தஞ்சை ஜெயராமன், அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story