நாகை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 22,963 மாணவ-மாணவிகள் எழுதினர்


நாகை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 22,963 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 8 March 2017 9:08 PM GMT)

நாகை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 22,963 மாணவ, மாணவிகள் எழுதினர்.

நாகப்பட்டினம்,

தமிழகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது.நாகை நகராட்சி நாகூர் கவுதியா மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வினை நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 835 மாணவர்களும், 11 ஆயிரத்து 458 மாணவிகளும், தனித்தேர்வர்கள் 507 ஆண்கள், 163 பெண்களும் என மொத்தம் 22 ஆயிரத்து 963 பேர் தேர்வு எழுதினர். இதில் 451 பேர் தேர்வு எழுதவில்லை. நாகை மாவட்டத்தில் 84 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு பணியில் உயர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பணி நிலையில் 90 பேரும், ஆசிரியர்கள் பணி நிலையில் ஆயிரத்து 822 பேரும், அலுவலக பணியாளர்கள் நிலையில் 234 பேரும், 111 போலீசாரும் என மொத்தம் 2 ஆயிரத்து 257 பேர் ஈடுபட்டு உள்ளனர்.

பறக்கும் படை

நாகை மாவட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர், குருக்கத்தி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்டக்கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் 20 ஆசிரியர்கள் அடங்கிய பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 162 ஆசிரியர்கள் அடங்கிய நிலையான பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகளுக்கு தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரிபாய், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Next Story