கரூர் மாவட்டத்தில் 13,242 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்


கரூர் மாவட்டத்தில் 13,242 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 8 March 2017 11:00 PM GMT (Updated: 8 March 2017 9:10 PM GMT)

கரூர் மாவட்டத்தில் 13,242 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.

கரூர்,

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அதன்படி கரூர் மாவட்டத்தில் 190 பள்ளிகளில் இருந்து 6,718 மாணவர்கள்,6,472 மாணவிகள் என 13,190 மற்றும் 273 தனித்தேர்வர்கள் என மொத்தம் 13,463 பேர் தமிழ் முதல் தாள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

நேற்று தமிழ் முதல் தாள் தேர்வில் 221 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதன்படி நேற்று 13,242 பேர் தமிழ் முதல்தாள் தேர்வு எழுதினர்.கரூர் அருகே உள்ள தாந்தோன்றி அரசு மேல்நிலைப்பள்ளியில் பார்வையற்ற மாணவி மஞ்சுளாவுக்காக ஆசிரியர் குழந்தைவேல் தேர்வு எழுதினார். கேள்வியை படித்ததும், அதற்கான பதிலை மாணவி கூறும்போது அதை ஆசிரியர் விடைத்தாளில் எழுதினார்.

தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 50 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களை கண்காணிக்க 50 முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள், 5 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 50 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அதே போன்று 140 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் 1,100 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

எளிதாக இருந்தது

முன்னதாக தேர்வு எழுத செல்வதற்கு முன்பு மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் அவரவர் வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்று நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும் என்று சாமி கும்பிட்டனர். பின்னர் பெற்றோர், ஆசிரியர்களிடம் ஆசி பெற்று தேர்வு அறைக்கு சென்றனர். காலை 8 மணி முதல் அந்தந்த தேர்வு மையத்திற்கு மாணவ-மாணவிகள் வரத்தொடங்கினர். பின்னர் தேர்வு மையத்தின் நுழைவு பகுதியில் வைக்கப்பட்டு உள்ள அறிவிப்பு பலகையில் எந்த அறை ஒதுக்கப்பட்டு உள்ளது என்று பார்வையிட்டனர். பின்னர் பள்ளி தேர்வு மைய வளாகத்தில் அமர்ந்து இறுதியாக பாட புத்தகத்தை எடுத்து படித்தவற்றை ஒரு முறை நினைவு படுத்திக்கொண்டனர். தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு முடிவடைந்தது.

பசுபதீஸ்வரா பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதி விட்டு வந்த மாணவ- மாணவிகள் கூறும்போது, தமிழ் முதல் தாள் மிகவும் எளிதாக இருந்தது என்று கூறினர்.

புகார் பெட்டி

ஒவ்வொரு தேர்வு மையத்திலும் புகார் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. மாணவ-மாணவிகள் ஏதாவது குறைகள் இருந்தால் அந்த புகார் பெட்டியில் எழுத்து பூர்வமாக எழுதி போடுவதற்காக இந்த புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளதாக கல்வி அதிகாரிகள் கூறினர். 

Next Story