நெடுவாசல் உள்பட 3 இடங்களில் தர்ணா போராட்டம் தொடருகிறது


நெடுவாசல் உள்பட 3 இடங்களில் தர்ணா போராட்டம் தொடருகிறது
x
தினத்தந்தி 8 March 2017 11:00 PM GMT (Updated: 8 March 2017 9:10 PM GMT)

இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் உள்பட 3 இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, வாணக் கான்காடு, வடகாடு, கல்லிக்கொல்லை, கோட்டைக்காடு ஆகிய கிராமங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடந்த மாதம் (பிப்ரவரி) 15-ந்தேதி அனுமதி வழங்கியது. இந்த திட்டத்தை அமல்படுத்தினால் நெடுவாசல் உள்பட பக்கத்து கிராமங்களிலும் விவசாயம் பாதிக்கப்படும் எனவும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், அதனால் இத்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நெடுவாசலில் நாடியம்மன் கோவில் முன்பு குளக்கரை அருகே மரத்தடியில் கடந்த மாதம் 16-ந்தேதி அக்கிராம மக்கள் அறப்போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், விவசாயிகள், தன்னார்வ அமைப்பினர் உள்பட பலர் பங்கேற்று வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து பேசிவிட்டு சென்றுள்ளனர்.

நெடுவாசல்

போராட்டத்தை கைவிட கோரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர் வலியுறுத்தியும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு இத்திட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நெடுவாசலில் நேற்று 21-வது நாளாக போராட்டம் நீடித்தது. இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் பலர் பேசினர். தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

நல்லாண்டார்கொல்லை

இதேபோல நெடுவாசல் அருகே நல்லாண்டார் கொல்லையிலும் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வயல்வெளியில் நேற்று 21-வது நாளாக போராட்டம் நடந்தது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் வளம் பற்றி ஆய்வு செய்வதற்காக நல்லாண்டார் கொல்லையில் அமைத்த ஆழ்துளை கிணற்றின் அருகே நேற்று காலை பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது ஆழ்துளை கிணற்றை பெண்கள் சுற்றி வந்து திட்டத்திற்கு எதிராகவும், திட்டத்தால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஒப்பாரி வைத்து அழுதனர்.

வடகாடு

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வடகாட்டில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று 4-வது நாளாக தர்ணா போராட்டம் நீடித்தது. வடகாடு போராட்டத்திலும் அக்கிராமத்தை சுற்றியுள்ள பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று காலையில் பெண்கள் கும்மியடித்து பாட்டுப்பாடியும், ஒப்பாரி வைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஆண்கள் கோலாட்டம் ஆடி உற்சாகப்படுத்தினர்.

எம்.ஜி.ஆர்., அம்மா-தீபா பேரவையால் நியமிக்கப்பட்ட 27 பொறுப்பாளர்கள் வடகாட்டிற்கு நேற்று நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். நெடுவாசல் உள்பட 3 கிராமங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களும் தங்களது அன்றாட பணிகளுக்கு செல்லாமல் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story