எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது 9,649 மாணவ-மாணவிகள் எழுதினர்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது 9,649 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 8 March 2017 10:45 PM GMT (Updated: 8 March 2017 9:10 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 9,649 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

பெரம்பலூர்,

தமிழகம் முழுவதும் 2016-17-ம் ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் 32 மையங் களில் தமிழ் முதல் தாள் தேர்வு நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணி முதலே மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். பின்னர் அவர்கள் தேர்வு மைய வளாகத்தில் அமர்ந்து கடைசியாக ஒருமுறை படித்த பாடங்களை திருப்பி பார்த்து நினைவு கூர்ந்தனர்.

தேர்வு எழுத சென்ற தங்களது பிள்ளைகளுக்கு பேனா, பென்சில் உள்ளிட்டவற்றை பரிசளித்து வெற்றிகரமாக தேர்வு எழுதுமாறு பெற்றோர்கள் முத்தமிட்டு வாழ்த்து கூறினர். தேர்வு அறையில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பிரார்த்தனை கூட்டத்தின்போது ஆசிரியர்கள் விளக்கி கூறினர். எனினும் தமிழ் முதல் தாள் தேர்வு என்பதால் மாணவ, மாணவிகள் பதற்றம் அடையாமல் புத்துணர்வுடனேயே காணப்பட்டனர்.

தேர்வுக்கூட நுழைவு சீட்டு

காலை 9 மணியளவில் அனைத்து மாணவ-மாணவிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறைக்கு சென்று வரிசை எண்ணை சரிபார்த்து அமர்ந்தனர். பின்னர் தேர்வுக்கூட நுழைவு சீட்டு உள்ளிட்டவற்றை அறை கண்காணிப்பாளர்கள் சரிபார்த்தனர். 9.15 மணியளவில் மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. அதன் பின்னர் வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளை 10 நிமிடம் மாணவர்கள் வாசித்தனர். அதனை தொடர்ந்து விடைத்தாள் வழங்கப்பட்டு சரியாக 9.30 மணிக்கு தமிழ் முதல் தாள் தேர்வு தொடங்கியது. மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.

9,649 பேர் எழுதினர்

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அரசு, அரசு உதவிபெறும், தனியார், மெட்ரிக் என 136 பள்ளிகளை சேர்ந்த 5,256 மாணவர்கள், 4,506 மாணவிகள் என மொத்தம் 9,762 பேர் தகுதி பெற்றிருந்தனர். இதில் 9,649 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 113 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் எளிதில் சென்று வரும் வகையில் பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும் தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் தடையின்றி மின்சார வசதி உள்ளிட்டவை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வழிகாட்டுதலின்படி செய்யப்பட்டிருந்தது. தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் முறைகேடு, வசதி குறைபாடுகள் உள்ளிட்டவை குறித்து புகார் அளிக்க தேர்வு மையங்களில் புகார் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுத தகுதி பெற்றிருந்த 293 தனித்தேர்வர்களில் 270 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 23 பேர் தேர்வுக்கு வரவில்லை.

கல்வி அதிகாரிகள் பார்வையிட்டனர்

தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளராக 32 தலைமை ஆசிரியர்களும், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளராக 6 தலைமை ஆசிரியர்களும், அறை கண்காணிப்பாளராக 555 ஆசிரியர்களும், வினாத்தாளை பத்திரமாக எடுத்து செல்லும் வகையில் 9 வழித்தட அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, எறையூர் நேரு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு எழுதியதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி மற்றும் கல்வி அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்கள் தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? என்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு) அம்பிகாவதி மற்றும் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

70 பறக்கும் படையினர்

தேர்வின்போது காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், துண்டு சீட்டு வைத்திருத்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயலில் ஈடுபடும் மாணவர்களை பிடிப்பதற்காக 70 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை சுற்றி சுற்றி வந்து கண்காணித்தனர்.

காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வானது மதியம் 12 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பின்னர் மாணவ, மாணவிகள் தங்களது ஆசிரியரை சந்தித்து சந்தேக வினாக்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) தமிழ் 2-ம் தாள் தேர்வு நடைபெற உள்ளது. 

Next Story