கால்நடைகளுக்கு உலர் தீவனங்கள் குறைந்த விலையில் வழங்கும் திட்டம் அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்


கால்நடைகளுக்கு உலர் தீவனங்கள் குறைந்த விலையில் வழங்கும் திட்டம் அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 March 2017 9:39 PM GMT (Updated: 8 March 2017 9:38 PM GMT)

குமாரபாளையம் அருகே கால்நடைகளுக்கு உலர் தீவனங்கள் குறைந்த விலையில் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார். உலர் தீவனங்கள் வழங்கும் திட்டம் நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் வறட்சி நிவாரணம் மற்றும் கால்நடைகளுக்கு உலர்

குமாரபாளையம்,

குமாரபாளையம் அருகே கால்நடைகளுக்கு உலர் தீவனங்கள் குறைந்த விலையில் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்.

உலர் தீவனங்கள் வழங்கும் திட்டம்

நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் வறட்சி நிவாரணம் மற்றும் கால்நடைகளுக்கு உலர் தீவனங்கள் வழங்கும் திட்ட தொடக்க விழா குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் டாக்டர் மு.சீனிவாசன் வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு கால்நடைகளுக்கு உலர் தீவனங்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறைந்ததன் காரணமாக கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு தீவனங்களை அளிப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை போக்கிட அரசே கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடைகளுக்கான உலர் தீவனங்களை கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.

10 இடங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் களங்காணி, எருமப்பட்டி, ஆண்டகலூர் கேட், கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, மோர்ப்பாளையம், மாணிக்கம்பாளையம், குப்பாண்டபாளையம், ஆனங்கூர் மற்றும் காதப்பள்ளி ஆகிய 10 இடங்களில் இந்த சிறப்பு திட்டத்திற்காக உலர் தீவனக்கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கிடங்கிற்கு ரூ.18 லட்சம் வீதம் 10 கிடங்குகளுக்கும் ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 5 மாடுகள் வைத்துள்ள ஒரு நபருக்கு மலிவு விலையான ரூ.2–க்கு ஒரு கிலோ வீதம் வாரம் ஒரு முறை 105 கிலோ வரை கால்நடைகளுக்கான உலர் தீவனம் விற்பனை செய்யப்படுகின்றது.

கால்நடை வளர்ப்போர் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் உலர் தீவனக்கிடங்கு அமைந்துள்ள கால்நடை மருந்தகத்திலுள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம்.

வறட்சி நிவாரணம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கும் விதமாக நாமக்கல் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.72 கோடியே 61 லட்சம் வறட்சி நிவாரணம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக்கணக்குகளிலேயே நேரடியாக செலுத்தப்பட்டு வருகின்றது.

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.

இந்த விழாவில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.கே.சுப்பிரமணியம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பி.என்.கந்தசாமி, குப்பாண்டபாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் சின்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கால்நடை பராமரிப்புத்துறையின் துணை இயக்குனர் டாக்டர் ராஜமனோகரன் நன்றி கூறினார்.


Next Story