அமைச்சர் கந்தசாமியின் கார் முன்பு மறியல், பாரதீய ஜனதா கட்சியினர் கைது


அமைச்சர் கந்தசாமியின் கார் முன்பு மறியல், பாரதீய ஜனதா கட்சியினர் கைது
x
தினத்தந்தி 8 March 2017 10:15 PM GMT (Updated: 8 March 2017 10:07 PM GMT)

அமைச்சர் கந்தசாமியின் கார் முன்பு மறியலில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சாய்பாபா திருமண நிலையத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக நேற்று காலை விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி காரில் வந்தார். அப்போது அண்ணா சாலையிலிருந்து சாய்பாபா திருமண நிலையத்துக்கு செல்லும் சாலையில் நின்றிருந்த பாரதீய ஜனதா கட்சியினர் திடீரென அமைச்சர் கந்தசாமியின் காரை வழிமறித்தனர்.

அப்போது அவர்கள் அமைச்சர் கந்தசாமிக்கு எதிராக கோ‌ஷமிட்டு அவர் விழாவில் கலந்துகொள்ளாமல் திரும்பி செல்ல வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஏன் அழைக்கவில்லை?

இதைத்தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி காரில் இருந்து இறங்கி, எதற்காக மறியல் செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாரதீய ஜனதா கட்சியினர், விழாவுக்கு கவர்னரை ஏன் அழைக்கவில்லை? அவரது பெயரை ஏன் அழைப்பிதழில் போடவில்லை? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்கள்.

அவர்களிடம் அமைச்சர் கந்தசாமி, விழாவுக்கு வாருங்கள் அதுகுறித்த விளக்கத்தை தருகிறேன் என்று கூறினார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத பாரதீய ஜனதா கட்சியினர் தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி நடந்தே விழா நடந்த திருமண நிலையத்துக்கு வந்தார்.

20 பேர் கைது

அதன்பின் விழாவுக்கு வந்த முதல்–அமைச்சர் நாராயணசாமி முன்பும் போராட்டம் நடத்த பாரதீய ஜனதா கட்சியினர் தயாரானார்கள். இதைத்தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியினர் 20 பேரை போலீசார் கைதுசெய்தனர். இதற்கிடையே முதல்–அமைச்சர் நாராயணசாமி வேறு வழியாக வந்து விழாவில் கலந்துகொண்டார்.


Next Story