விவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரி எதிர்க்கட்சியினர் அமளி


விவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரி எதிர்க்கட்சியினர் அமளி
x
தினத்தந்தி 8 March 2017 10:12 PM GMT (Updated: 8 March 2017 10:11 PM GMT)

விவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரி எதிர்க்கட்சியினர் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர்.

மும்பை,

விவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரி எதிர்க்கட்சியினர் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ராதாகிருஷ்ண விகே பாட்டீல்

மராட்டிய சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதும், வறட்சியால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகளின் அவல நிலையை எடுத்து கூறி, எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதை தவிர வேறு மாற்று வழி இல்லை என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கு ஆதரவாக பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார், ‘‘பா.ஜனதா மந்திரிகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, இந்த பிரச்சினையை எவ்வாறு அணுகினார்கள்? என்பதை சிந்தித்து பாருங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார். மேலும், தொழிற்சாலைகளுக்கு கடன் தள்ளுபடி செய்யும்போது, விவசாயிகளுக்கு ஏன் கடன் தள்ளுபடி செய்ய கூடாது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சிக்கு சிவசேனா ஆதரவு

இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோ‌ஷம் எழுப்பினர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக சிவசேனா எம்.எல்.ஏ.க்களும் சபையின் மையப்பகுதிக்கு வந்து குரல் எழுப்பினர். இதனால், சட்டசபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. எனவே, சட்டசபையை முதலில் 15 நிமிடத்துக்கு சபாநாயகர் ஹரிபாவு பாக்டே ஒத்திவைத்தார்.

சபை மீண்டும் கூடியதும் நிலைமையில் மாற்றமில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எனவே, கேள்வி நேரம் வரை சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. சபை மீண்டும் கூடியதும் கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே பேசினார். அவர் கூறுகையில், ‘‘மராட்டிய அரசு விவசாயிகளுக்கு ஆதரவானது. விவசாயிகள் கடனில் இருந்து விடுபட அரசு விரும்புகிறது’’ என்றார்.

நடைமுறைக்கு ஒத்துவராதது

இதையடுத்து, விவசாயத்துறை மந்திரி பாண்டுரங் பூந்த்கர் பேசியதாவது:–

எதிர்க்கட்சியினரின் கோரிக்கை நடைமுறைக்கு ஒத்துவராதது. விவசாய கடன் தள்ளுபடி கோரிக்கைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தகுந்த நேரத்தில் விவசாயக்கடன் தள்ளுபடி பற்றி பரிசீலிக்கப்படும் என்று ஏற்கனவே முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருக்கிறார். வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் திறம்பட செயல்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதன்பின்னர், விவசாயக்கடன் தள்ளுபடி குறித்து பரிசீலனை நடத்துவோம்.

இவ்வாறு பாண்டுரங் பூந்த்கர் தெரிவித்தார்.

நாள் முழுவதும் ஒத்திவைப்பு

இருந்தாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். மேலும், அரசுக்கு எதிராக தொடர்ந்து கோ‌ஷம் எழுப்பி வந்தனர். இதனால், சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று அலுவல் பணி ஏதும் நடைபெறவில்லை.


Next Story