மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்


மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 8 March 2017 10:47 PM GMT (Updated: 8 March 2017 10:46 PM GMT)

மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டப்படி கூட்டுறவு வீட்டுவசதி சங்க பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்று மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்க ஊழியர்களின் குழு கூட்டம் அதன் தலைவர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் விஸ்வரூப கேசவன், பொருளாளர் முனியாண்டி, உதவி தலைவர் கணேசன் ஆகியோர் ஊழியர்களுக்கான பிரச்சினைகள் குறித்து விளக்கி பேசினர். இதனை தொடர்ந்து கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாற்றுப்பணி

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள வீட்டு வசதி திட்டங்களை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டபடி வீட்டு வசதி சங்க பணியாளர்களுக்கு அரசு துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும். கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களை முடக்கும் திட்டமான ஆன்–லைன் மூலம் பணம் செலுத்தும் நடைமுறையினை கைவிட வேண்டும்.

மருத்துவ காப்பீடு

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் நடைமுறையில் இருக்கும் 2–ம், 4–ம் சனிக்கிழமைகளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் நிபந்தனை இன்றி மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும். வீட்டு வசதி சங்க பணியாளர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும்.

ரே‌ஷன் கடைகளுக்கு கடந்த 2 மாதங்களாக பருப்பு, பாமாயில் ஆகியவை முறையாக விநியோகம் செய்யப்படவில்லை. அவற்றை முறையாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கூட்டுறவு பண்டக சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்கவும், பொதுவிநியோக திட்டத்தில் தேங்கி உள்ள காலி சாக்குகளை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story