திராவிடர் விடுதலை கழக பிரமுகர் கொலை வாலிபர் கோர்ட்டில் சரண்
கோவையில் திராவிடர் விடுதலை கழக பிரமுகர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒரு வாலிபர் கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை தெற்கு உக்கடம் பகுதியை சேர்ந்தவர் பாரூக் (வயது 31). திராவிடர் விடுதலை கழக பகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர் பழைய இரும்பு வியாபாரமும் செய்துவந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
போனில் பேசியதும் அவர் தனது மொபட்டை எடுத்துக்கொண்டு உக்கடம் கழிவுநீர் பண்ணை சாலை வழியாக சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து கழுத்தை அறுத்தும், வயிற்றில் கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. கொலையாளிகள் ஆட்டோ மற்றும் 2 மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
அழைத்த நபர் யார்?போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பாரூக்கின் செல்போனுக்கு கடைசியாக பேசியவர் யார்? என்று விசாரித்தனர். அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
பாரூக் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்தவர் என்பதால், கடவுள் மறுப்பு கொள்கையை தீவிரமாக பேசிவந்தார். சமீபத்தில் பேஸ்புக்கில் இவர் பதிவு செய்த, ஒரு புகைப்படத்துக்கு பலரிடம் இருந்து எதிர்ப்பு வந்துள்ளது. இந்த முன்விரோதத்தில் கொலை செய்துள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
வாலிபர் சரண்4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக நேற்று மாலை கோவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போத்தனூரை சேர்ந்த அன்சாத் (31) என்பவர் சரண் அடைந்தார். அவரை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு பிறகுதான் கொலைக்கான காரணம் தெரியவரும். இந்த கொலை தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.