100 நாள் வேலை திட்டத்தில் மலைவாழ் மக்களுடன் இணைந்து தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்ட கலெக்டர்


100 நாள் வேலை திட்டத்தில் மலைவாழ் மக்களுடன் இணைந்து தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 6 April 2017 10:30 PM GMT (Updated: 6 April 2017 12:59 PM GMT)

100 நாள் வேலை திட்டத்தில் மலைவாழ் மக்களுடன் இணைந்து தடுப்பணை கட்டும் பணியில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஈடுபட்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள தும்பக்காடு மலைக்கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பார்வையிட்டார்.

பின்னர் அவர் அங்கு பணிபுரிந்த அப்பகுதியை சேர்ந்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளிகளிடம் கூறுகையில், ‘மலைப்பகுதிகளில் இதுவரை பெய்த மழைநீரை நீங்கள் சேமித்து வைக்காமல் வீணாக்கி விட்டீர்கள். இனிமேல் மழைநீர் வெளியேறாத வகையில் மலையிலேயே தேக்கி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதேபோல் மேலும் பல இடங்களில் தடுப்பணை கட்டி மழைநீரை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மழைநீரை சேகரிக்கும் பணிக்காக கட்டப்படும் இந்த தடுப்பணை பணியில் நானும் உடல் உழைப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். என்னையும் இந்த பணியில் சேர்த்து கொள்ளுங்கள்’ என்றார்.

2 மணி நேரம்

தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே மலைவாழ் மக்களுடன் இணைந்து 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டார்.

ஓடையில் இருந்த மண்ணை அகற்றியும், தடுப்பணை கட்டுவதற்காக கருங்கற்கள் எடுத்து கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டார். சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து தடுப்பணை கட்டும் பணியில் வியர்வை சொட்ட, சொட்ட அவர் வேலை செய்தார்.

இதைக்கண்ட மலைவாழ் மக்கள் கலெக்டரை பாராட்டினார்கள். கலெக்டர் வேலை செய்ததால் அவருடன் சென்ற அதிகாரிகளும் 100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபட்டனர்.


Next Story