தண்டராம்பட்டு அருகே ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற கால்நடை டாக்டர் கைது


தண்டராம்பட்டு அருகே ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற கால்நடை டாக்டர் கைது
x
தினத்தந்தி 6 April 2017 11:15 PM GMT (Updated: 6 April 2017 1:01 PM GMT)

தண்டராம்பட்டு அருகே இறந்த மாட்டுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க விவசாயியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம்

தண்டராம்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகேயுள்ள போந்தை கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 40), விவசாயி. இவர் தனது வீட்டில் சொந்தமாக சில மாடுகள் வளர்த்து வருகிறார். அவற்றில் ஒரு பசுமாட்டுக்கு ரூ.30 ஆயிரத்துக்கு இன்சூரன்ஸ் செய்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 30–ந் தேதி அந்த பசுமாடு திடீரென இறந்து போனது. இதையடுத்து சம்பத் இன்சூரன்ஸ் பெறுவதற்காக இறந்த பசுமாட்டிற்கு இறப்பு சான்றிதழ் பெற முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து சம்பத் பசுமாட்டிற்கு இறப்பு சான்றிதழ் பெற தானிப்பாடியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு சென்றார்.

ரூ.2 ஆயிரம் லஞ்சம்

அங்கு பணியில் இருந்த டாக்டர் ஜலகண்டேஸ்வரன் (வயது 47) இறந்த பசு மாட்டிற்கு இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தரும்படி கேட்டுள்ளார். அதற்கு சம்பத், தன்னால் ரூ.3 ஆயிரத்தை உடனடியாக தயார் செய்து தர முடியாது. 2 நாட்களில் ரூ.2 ஆயிரம் தருகிறேன் என்று கூறி உள்ளார். அதற்கு டாக்டர் ஜலகண்டேஸ்வரன் ரூ.2 ஆயிரம் தந்தால் உடனடியாக இறப்பு சான்றிதழ் தருவேன் என்று கூறியிருக்கிறார்.

பசுமாட்டிற்கு இறப்பு சான்றிதழ் பெற டாக்டருக்கு லஞ்சம் கொடுக்க சம்பத் விரும்பவில்லை. இதுகுறித்து அவர் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், திருவண்ணாமலை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பத்தை அழைத்து விசாரித்தனர்.

பின்னர் சம்பத் கையில் ரசாயனம் தடவிய ரூ.500 நோட்டுகள் 4 என ரூ.2 ஆயிரம் கொடுத்து டாக்டர் ஜலகண்டேஸ்வரனிடம் கொடுக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.

கால்நடை டாக்டர் கைது

அதன்படி நேற்று காலை 11 மணியளவில் தானிப்பாடி கால்நடை மருத்துவமனைக்கு சம்பத் சென்று அங்கிருந்த டாக்டர் ஜலகண்டேஸ்வரனிடம் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை கொடுத்தார். டாக்டர் ஜலகண்டேஸ்வரன் பணத்தை பெற்றபோது மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கால்நடை துறை உதவி இயக்குனர் சந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து கால்நடை துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு டாக்டர் ஜலகண்டேஸ்வரன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி இயக்குனர் சந்திரன் தெரிவித்தார்.

தொடர்ந்து சிறிது நேரத்தில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் டாக்டர் ஜலகண்டேஸ்வரனை திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.


Next Story