தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு: அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை


தூத்துக்குடியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு: அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 April 2017 9:00 PM GMT (Updated: 6 April 2017 1:05 PM GMT)

தூத்துக்குடி மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு வீடுகள்

தூத்துக்குடி வெற்றிவேல்புரம் பகுதியில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து 13 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் அந்த வீடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று மாநகர நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றுவதற்காக பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். அந்த பகுதியில் மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

அப்போது அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். பொக்லைன் எந்திரம் முன்பு சிலர் மறித்து நின்றனர். பின்னர், அந்த பகுதியில் ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன், மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, வீடுகளை உடனடியாக அகற்றக்கூடாது. அந்த வீட்டில் வசிப்பவர்கள் வேறு இடத்துக்கு செல்வதற்கு வசதியாக அவகாசம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

15 நாட்கள் காலஅவகாசம்

அதன்பேரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில் வசித்து வரும் மக்கள் வேறு இடங்களுக்கு செல்வதற்கு வசதியாக 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு அதிகாரிகள் அங்கிருந்து பொக்லைன் எந்திரத்துடன் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story