சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்ட ஐதராபாத் வாலிபர்களுக்கு வரவேற்பு


சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்ட ஐதராபாத் வாலிபர்களுக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 6 April 2017 1:09 PM GMT)

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம்

மானாமதுரை

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சந்தீப்ரெட்டி பன்னர்(வயது 26), கிருஷ்ணகவுன்டனயாவிதுகிரி(21) ஆகியோர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர். 150 நாட்களில் 22 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இவர்கள் ஐதராபாத் சைக்கிள் கிளப் உறுப்பினர்களாக உள்ளனர். சந்தீப்ரெட்டி சைக்கிள் உதிரி பாகங்கள், விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கிருஷ்ணகவுன்டனயாவிதுகிரி, விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 26–ந் தேதி சைக்கிள் பயணத்தை தொடங்கிய இவர்கள் நேற்று முன்தினம் மானாமதுரை வந்தனர். அவர்களுக்கு மானாமதுரையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர். இதன்பின்பு அவர்கள் ராமேசுவரம் புறப்பட்டு சென்றனர்.

பல்வேறு சாதனை

இந்த விழிப்புணர்வு சுற்றுப்பயணம் குறித்து சந்தீப்ரெட்டி பன்னர் கூறியதாவது:–

கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுபோன்ற வாகனங்களினால் சுற்றுப்புறச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. சிறுவயதில் இருந்தே ரத்ததானம் செய்வது போன்ற பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கின்னஸ் சாதனைக்காகவும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளோம். நாங்கள் இருவரும் சைக்கிள் பயணத்தில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளோம்.

சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சைக்கிளில் தான் வலம் வருகிறோம். வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் நாங்கள் இந்த பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story