நத்தக்காடையூர் அருகே டாஸ்மாக் கடை அமைத்தால் போராட்டம் ஆலோசனை கூட்டத்தில் கிராம மக்கள் முடிவு


நத்தக்காடையூர் அருகே டாஸ்மாக் கடை அமைத்தால் போராட்டம் ஆலோசனை கூட்டத்தில் கிராம மக்கள் முடிவு
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 6 April 2017 3:11 PM GMT)

நத்தக்காடையூர் அருகே குடிமங்களம் மிதிபாறையில் டாஸ்மாக் கடை அமைத்தால் போராட்டம்

முத்தூர்,

தமிழகம் முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் 500 மீட்டர் தொலைவிற்குள் இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் தற்போது மாவட்டம் முழுவதும் 66 டாஸ்மாக் கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு பகுதிகளில் அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பாரதியார்நகர் அருகில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை, குடிமங்களம் மிதிபாறை பகுதியில் மாற்றி அமைக்க டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து குடிமங்களம் மிதிபாறை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வசந்த நகர், கட்டபொம்மன்நகர், பெரியகாட்டுப்பதி, தீத்தாக்கவுண்டன்வலசு, வாய்க்கால்மேடு, மன்றாடியார்நகர், பழையகோட்டைபுதூர், கோட்டக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டம்

இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் இப்பகுதியை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ–மாணவிகள், பெண்கள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆகியோருக்கு மது பிரியர்களால் இடையூறு ஏற்படும்.

எனவே இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் குடிமங்களம் மிதிபாறை பகுதி 10–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வசந்தநகர் விநாயகர் கோவில் திடலில் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் குடிமங்களம் மிதிபாறை பகுதியில் டாஸ்மாக் கடை அமைய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால், கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலைமறியல், கருப்பு கொடி ஏற்றுதல் உட்பட பல்வேறு அறப்போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


Next Story