கடும் வறட்சியால் குட்டைபோல் காணப்படும் பெரும்பள்ளம் அணை


கடும் வறட்சியால் குட்டைபோல் காணப்படும் பெரும்பள்ளம் அணை
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 6 April 2017 5:36 PM GMT)

கடும் வறட்சியால் பெரும்பள்ளம் அணை குட்டைபோல் காணப்படுகிறது.

பவானிசாகர்,

சத்தியமங்கலம் அருகே உள்ளது கடம்பூர். மலைப்பகுதியான இங்கு பல கிராமங்கள் உள்ளன. கடல்மட்டத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதி 760 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் பருவம் தவறாமல் மழை பெய்து வந்தது. மழை தண்ணீரை தேக்கி வைக்க கடம்பூர் மலைப்பகுதி அடிவாரத்தில் உள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் பெரும்பள்ளம் தடுப்பு அணை கட்டப்பட்டது.

 1984–ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த அணை கட்டும் பணி தொடங்கப்பட்டு 1989–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணி முடிவடைந்தது. மொத்தம் ரூ.5 கோடியே 41 லட்சம் செலவில் இந்த அணை கட்டப்பட்டு, 1992–ம் ஆண்டு ஜனவரி மாதம் திறப்பு விழா நடந்தது.

குட்டைபோல் மாறியது


அணையின் நீர்மட்ட உயரம் 31 அடியாகும். இந்த அணையின் மூலம் தாசரிபாளையம், கொண்டப்பநாயக்கன்பாளையம், செல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 546 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணை நிரம்பும்போது காளியூர், டி.என்.பாளையம் பகுதியில் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் அதிகரிக்கும்.

பெரும்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதியான கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து நின்று போனது. இதன் காரணமாக பெரும்பள்ளம் அணை குட்டைபோல் காணப்படுகிறது. மேலும் வறட்சி ஏற்பட்டதால் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story