சிட்கோ தொழிற்பேட்டையில் லாரிகளால் இடையூறு நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு


சிட்கோ தொழிற்பேட்டையில் லாரிகளால் இடையூறு நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 6 April 2017 11:00 PM GMT (Updated: 6 April 2017 6:55 PM GMT)

நாகர்கோவில் சிட்கோ தொழிற்பேட்டையில் லாரிகளால் இடையூறு ஏற்படுவதாக அனைத்து தொழில் முனைவோர் சார்பில் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,


நாகர்கோவில் கோணத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. இவற்றில் 1,500–க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சில நிறுவனங்களில் பகல்– இரவு நேரங்களில் ‘ஷிப்ட்‘ அடிப்படையில் பணிகள் நடைபெறுகின்றன.

இந்தநிலையில் இந்த தொழிற்பேட்டை வளாகத்துக்குள் அரசு நுகர்பொருள் வாணிபக்கழக குடோன், அரசு டாஸ்மாக் குடோன் மற்றும் அலுவலகம், ராணுவ கேண்டீன் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் இவற்றுக்கு பொருள் ஏற்றி வரக்கூடிய லாரிகள் அந்தந்த குடோனுக்குள் போதிய இடவசதி இல்லாததால், 24 மணி நேரமும் தொழிற்பேட்டை வளாகத்தை சுற்றிலும், சாலையின் இருமருங்கிலும் நின்று கொண்டிருப்பதை காண முடிகிறது.

சில நேரங்களில் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்களில் வாயில்கள் முன்பும் லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் தொழிற்பேட்டையில் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை வாகனங்களில் குறித்த நேரத்தில் ஏற்றிச்செல்ல முடியாத நிலையும், வெளியூர்களுக்கு அனுப்ப முடியாத நிலையும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

புகார் மனு

இதுதொடர்பாக தொழிற்பேட்டையில் தொழில் செய்யும் அனைத்து தொழில் முனைவோர் சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், டாஸ்மாக் அதிகாரிகள், நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள், ராணுவ கேண்டீன் அதிகாரிகள் போன்றோருக்கு புகார் மனுக்களையும் அனுப்பியுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

டாஸ்மாக், நுகர்பொருள் வாணிபக்கழக குடோன், ராணுவ கேண்டீன் ஆகியவற்றில் பொருள் இறக்க மற்றும் ஏற்ற வந்து நிற்கும் லாரிகளால் நாங்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகிறோம். மேலும் மேற்கண்ட குடோன்களுக்கு வந்து செல்லக்கூடிய சரக்கு வாகனங்களின் நெருக்கடியால் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் எந்திரங்களை தொழிற்பேட்டைக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுகிறது.

மது அருந்துவது

மேலும் தொழிற்பேட்டையில் இடையூறாக நிறுத்தி வைத்திருக்கும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களின் டிரைவர்கள்– கிளீனர்கள் பகல் மற்றும் இரவு வேளைகளில் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்துவது, சீட்டு விளையாடுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். அம்மாதிரியான வேளைகளில் தொழிற்பேட்டை தொழில் நிறுவனங்களில் வேலைக்காக வந்து செல்லும் பெண் ஊழியர்களை கேலி– கிண்டல் செய்வதும் நடைபெற்று வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பெண் ஊழியர்கள் அப்பகுதியில் அச்சத்துடனேயே வந்து செல்லும் நிலை ஏற்படுகிறது.

அனுமதிக்கக்கூடாது

தொழிற்பேட்டையில் தொழில் முனைவோர் ஆகிய எங்களுக்கு தொழில் செய்ய ஏற்ற சூழல் காணப்படவில்லை. தொழிற்பேட்டை தற்போது கனரக சரக்கு வாகனம் நிறுத்தும் இடமாகவும், அந்த வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் கிளீனர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் மதுபானம் அருந்தும் இடமாகவும் காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு தொழிற்சாலையில் பணி செய்த பெண் ஊழியரின் தங்க சங்கிலி இரவு நேரத்தில் பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

எனவே தொழில் சாராத டாஸ்மாக் குடோன், நுகர்பொருள் வாணிபக்கழக குடோன் ஆகியவற்றை தொழிற்பேட்டையில் இருந்து மாற்றவும், அதுவரையில் டாஸ்மாக் மற்றும் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனுக்கு வருகை தரும் வாகனங்களை சரக்குகளை இறக்குவதற்கு நேரடியாக டாஸ்மாக் மற்றும் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனுக்கு செல்ல மட்டும் தொழிற்பேட்டையில் அனுமதிக்க வேண்டும். இங்கு நாள் கணக்கிலோ, வாரக்கணக்கிலோ வாகனங்களை தொழிற்பேட்டையின் சாலைகளின் இருமருங்கிலும் நிறுத்தம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று தொழிற்பேட்டையில் தொழில் செய்யும் அனைத்து தொழில் முனைவோர் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story