வேதாரண்யத்தில் சேற்றில் சிக்கிய குதிரை குட்டி மீட்பு


வேதாரண்யத்தில் சேற்றில் சிக்கிய குதிரை குட்டி மீட்பு
x
தினத்தந்தி 6 April 2017 10:30 PM GMT (Updated: 6 April 2017 8:32 PM GMT)

வேதாரண்யத்தில் சேற்றில் சிக்கிய குதிரை குட்டி மீட்கப்பட்டது.

வேதாரண்யம்,

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு மான்கள், காட்டுப்பன்றி, நரி, குதிரைகள் ஆகிய ஏராளமான விலங்குகள் உள்ளன. தற்போது இப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டில் உள்ள விலங்குகள் நகருக்குள் தண்ணீர் தேடி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு கடந்த மாதம் தண்ணீர் தேடி வந்த 2 குதிரைகள் இறந்த சம்பவமும் நடந்துள்ளது. இந்தநிலையில் செம்போடையை சேர்ந்த ரகுநாதன், மூர்த்தி ஆகிய 2 பேரும் குடும்பத்துடன் வேதாரண்யம் பகுதி கடலுக்கு குளிக்க சென்றனர். அப்போது பிறந்து 3 மாதமே ஆன குதிரை குட்டி ஒன்று அதிவேகமாக ஓடிவந்து அப்பகுதியில் உள்ள சேற்றில் சிக்கி கொண்டு மீளமுடியாமல் தவித்தது. இதைகண்ட 2 பேரும் கடும் போராட்டத்துக்கு பின் சேற்றில் இருந்து குதிரை குட்டியை மீட்டு வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வனச்சரக அலுவலர் அயூப்கான், வனவர் சுப்பிரமணியன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்தவுடன் குதிரை குட்டி ஒப்படைக்கப்பட்டு பின்னர் பாதுகாப்பாக அது காட்டிற்குள் விடப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். 

Next Story