டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பள்ளி மாணவிகள்-பொதுமக்கள் மனு


டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பள்ளி மாணவிகள்-பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 6 April 2017 11:00 PM GMT (Updated: 6 April 2017 8:51 PM GMT)

அரியலூரில் 2 இடங்களில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பள்ளி மாணவிகள், பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தாமரைக்குளம்,

அரியலூர் அம்மாகுளம், ரெங்கசமுத்திரத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இடையூறு

அரியலூரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை அம்மாகுளம் சாலை, அய்யப்பன் ஏரி அருகே அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்மாகுளம், ரெங்கசமுத்திரம், சுப்ராயப்புரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அந்த பகுதிகள் வழியாக வந்து செல்கின்றனர்.

தற்போது அங்கு அமைக்கப்படும் டாஸ்மாக் கடைகளால் அனைத்து தரப்பினருக்கும் இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பள்ளி முடிந்து மாலை வேளையில் வீடு திரும்பும் மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அந்த பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் உறுதி அளித்தார். 

Next Story