சிவாஜி நினைவு சின்னத்தை எதிர்த்து வழக்கு மராட்டிய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


சிவாஜி நினைவு சின்னத்தை எதிர்த்து வழக்கு மராட்டிய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 April 2017 8:59 PM GMT (Updated: 6 April 2017 8:58 PM GMT)

சிவாஜி நினைவு சின்னத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மராட்டிய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

சிவாஜி நினைவு சின்னத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மராட்டிய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சிவாஜி நினைவு சின்னம்

மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடி செலவில், 689 அடி உயரத்தில் பிரமாண்ட சிலையும், நினைவு சின்னமும் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது.

இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், சத்ரபதி சிவாஜி நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோகன் பிண்டே என்ற கணக்கு தணிக்கையாளர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘‘அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இந்த தருணத்தில், இதுபோன்ற திட்டத்துக்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடி செலவிடுவது தேவையில்லாதது. கடந்த ஆண்டு 25 ஆயிரம் கிராமங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அரசு அறிவித்தது. ஆகையால், இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

3 வாரத்துக்குள் பதில்

இந்த வழக்கு தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் மற்றும் ஜி.எஸ்.குல்கர்னி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாநில அரசு அதன் நிலைப்பாட்டை 3 வாரத்துக்குள் பிரமாணப்பத்திரம் வாயிலாக தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டனர். –


Next Story