லால்குடி பட்டதாரி பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது


லால்குடி பட்டதாரி பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கைது
x
தினத்தந்தி 6 April 2017 11:00 PM GMT (Updated: 6 April 2017 9:05 PM GMT)

லால்குடியை சேர்ந்த பட்டதாரி பெண் விஷம் குடித்து இறந்த வழக்கில், அவரை தற்கொலைக்கு தூண்டியதாக காதலனை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பாப்பாங்குடியை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவருடைய மகன் தினேஷ்(வயது 26). இவர் புதுக்கோட்டையில் உள்ள வெளிநாட்டிற்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்தின் கிளை அரியலூரில் உள்ளது.

இந்த கிளையில் திருச்சி மாவட்டம் லால்குடி கீழ அன்பில் பகுதியை சேர்ந்த ரவியின் மகளும், பட்டதாரியுமான புவனேஸ்வரி(23) வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தினேஷ்-புவனேஸ்வரி இடையே பழக்கம் ஏற்பட்டு, அவர்கள் காதலித்து வந்தனர். அவர்களுடைய காதல் விவகாரம் புவனேஸ்வரி வீட்டிற்கு தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த நிச்சயம் செய்தனர்.

விஷம் குடித்து சாவு

இதனால் மனமுடைந்து காணப்பட்ட புவனேஸ்வரி கடந்த 4-ந் தேதி தினேஷை பார்ப்பதற்காக புதுக்கோட்டை பழைய பஸ் நிலைய பகுதிக்கு வந்தார். அங்கு வந்த தினேஷ் தனது மோட்டார் சைக்கிளில் புவனேஸ்வரியை அழைத்து கொண்டு புதுக்குளத்திற்கு சென்றார். அங்கு நீண்ட நேரம் 2 பேரும் பேசி கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் புதுக்கோட்டையில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர்.

இந்த நிலையில் இடைவேளையின் போது தினேஷ் தண்ணீர் வாங்க சென்றார். பின்னர் அவர் உள்ளே வந்து பார்த்தபோது புவனேஸ்வரி மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தினேஷ் உடனடியாக புவனேஸ்வரியை தனது மோட்டார் சைக்கிள் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் புவனேஸ்வரி விஷம் குடித்து உள்ளதாக கூறினர். இதைத்தொடர்ந்து அவரை மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த புவனேஸ்வரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

காதலன் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த புவனேஸ்வரியின் உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு வந்தனர். பின்னர் புவனேஸ்வரியின் சாவில் மர்மம் இருப்பதாக அவர்கள் புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் புவனேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக தினேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story