வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சிறை தண்டனை


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சிறை தண்டனை
x
தினத்தந்தி 6 April 2017 11:00 PM GMT (Updated: 6 April 2017 9:05 PM GMT)

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் தங்கவேல் என்கிற பிரின்ஸ் தங்கவேல் (வயது 57). இவர் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை முசிறி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.16 லட்சத்து 35 ஆயிரத்து 750-க்கு சொத்து சேர்த்ததாக கூறி கடந்த 1997-ம் ஆண்டு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

2 ஆண்டு சிறை தண்டனை

இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு தனிநீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 45 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 88 ஆவணங்கள் அரசு தரப்பில் குறியீடு செய்யப்பட்டன. இந்த வழக்கின் தீர்ப்பை ஊழல் தடுப்பு சிறப்பு தனிநீதிமன்ற நீதிபதி சாந்தி நேற்று கூறினார். அந்த தீர்ப்பில், “குற்றம் சாட்டப்பட்ட பிரின்ஸ் தங்கவேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்“ என்று கூறினார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தற்போது பிரின்ஸ் தங்கவேலுக்கு 3 ஆண்டுகளுக்கும் குறைவாக சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஊழல் தடுப்பு சிறப்பு தனிநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், அவர் ஒரு மாதத்துக்குள் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story