பாரம்பரிய மாட்டுவண்டி போட்டியை மீண்டும் நடத்த சட்டசபையில் மசோதா நிறைவேறியது


பாரம்பரிய மாட்டுவண்டி போட்டியை மீண்டும் நடத்த சட்டசபையில் மசோதா நிறைவேறியது
x
தினத்தந்தி 6 April 2017 9:06 PM GMT (Updated: 6 April 2017 9:05 PM GMT)

மராட்டியத்தில் பாரம்பரிய மாட்டு வண்டி போட்டியை மீண்டும் நடத்த சட்டசபையில் மசோதா நிறைவேறியது.

மும்பை,

மராட்டியத்தில் பாரம்பரிய மாட்டு வண்டி போட்டியை மீண்டும் நடத்த சட்டசபையில் மசோதா நிறைவேறியது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவு தெரிவித்தன.

மாட்டு வண்டி போட்டிக்கு தடை

மராட்டியத்தில் சங்கராந்தி திருநாளையொட்டி, ரேக்ளா பந்தயம் எனப்படும் மாட்டு வண்டி போட்டி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, கிராமப்புறங்களில் மாட்டு வண்டி போட்டி களைகட்டும். இந்த நிலையில், மாட்டு வண்டி போட்டியின் போது, காளைகள் துன்புறுத்தப் படுவதாக கூறி அதற்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014–ம் ஆண்டு தடை விதித்தது.

அதன்படி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் மாபெரும் இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு ஏதுவாக தமிழக சட்டசபையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேறியது.

சட்ட திருத்த மசோதா நிறைவேறியது

இதன் அடிப்படையில், மராட்டியத்திலும் பாரம்பரிய விளையாட்டு போட்டியான மாட்டு வண்டி போட்டி மீண்டும் துளிர்விட நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று நேற்று சட்டசபையில், மாட்டு வண்டி போட்டி மீண்டும் நடைபெறுவதற்கு வழிவகை செய்யும் பொருட்டு, மத்திய அரசின் விலங்குகள் சித்ரவதை தடுப்பு சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனால், மாட்டு வண்டி போட்டி மீண்டும் நடைபெறுவதற்கான மசோதா, சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அழிவில் இருந்து மீட்க...

இதன் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, கால்நடை பராமரிப்பு துறை மந்திரி மகாதேவ் ஜன்கர் பேசுகையில் கூறியதாவது:–

மராட்டியத்தின் கலாசார, பாரம்பரியத்தை கட்டிக் காப்பதிலும், ஊக்கம் அளிப்பதிலும் மாட்டு வண்டி போட்டியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, விலங்குகள் சித்ரவதை தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும், உள்நாட்டு பாரம்பரிய காளைகளை அழிவில் இருந்து மீட்பதற்கான கட்டாயமும் ஏற்பட்டு இருக்கிறது.

ஆகையால், மத்திய அரசின் விலங்குகள் சித்ரவதை தடுப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வராத வரையில், மாட்டு வண்டி போட்டியை சட்டரீதியாக நடத்த இயலாது.

3 ஆண்டு ஜெயில்

சட்ட திருத்தத்தின்படி, போட்டியில் ஈடுபடுத்தப்படும் காளைகளுக்கு எந்தவொரு வலியோ, காயமோ ஏற்படாது என்று உத்தரவாதத்துடன், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரின் முன் அனுமதியோடு மாட்டு வண்டி போட்டி நடத்தலாம். அதே சமயம், போட்டி நடத்துவதற்கான பொறுப்பை ஏற்பவர், விதிமுறை மீறலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவருக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

பாரம்பரிய காளைகளின் தூய்மை, பாதுகாப்பு மற்றும் உடல்நலம் ஆகியவை மசோதாவில் கருத்தில் கொள்ளப்பட்டது. மாட்டு வண்டி போட்டி நடைபெறும் இடத்தில் ஆம்புலன்சுகளும் தயார்நிலையில் நிறுத்தப்படும்.

இவ்வாறு மந்திரி மகாதேவ் ஜன்கர் தெரிவித்தார்.

மராட்டியத்தில் பாரம்பரிய மாட்டு வண்டி போட்டி மீண்டும் நடைபெற சட்டசபையில் மசோதா நிறைவேறியதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Next Story