குமரியில் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் ‘கடும்’ அவதி


குமரியில் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் ‘கடும்’ அவதி
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 6 April 2017 9:07 PM GMT)

குமரி மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் ‘கடும்’ அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சாலையோர கடைகளில் இளநீர், நுங்கு– பதனீர் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில்,


குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழைகள் பொய்த்துப்போனதின் காரணமாக அணைகள், குளங்கள், ஆறுகள், வாய்க்கால்கள் என அனைத்து நீர்நிலைகளுமே வறண்டுவிட்டன. தண்ணீர் இல்லாததின் காரணமாக எங்கு நோக்கினும் பசுஞ்சோலைகளாக காட்சி அளிக்கக்கூடிய குமரி மாவட்டம் பசுமைப் பொலிவை இழந்து காட்சி தருகிறது.

இதனால் மாவட்டத்தில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை கடந்த சில மாதங்களுக்கு முன்பே மாறி விட்டது. மேலும் ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கமும் அதிகமாகவே குமரி மாவட்டத்தில் காணப்படுகிறது. வடமாவட்டங்களில் அவ்வப்போது பெய்த மழைகூட குமரி மாவட்டத்தில் பெய்யவில்லை. இதனால் கடந்த ஜனவரி மாதமே கோடை வெயில் தொடங்கிவிட்டதோ? என்று எண்ணத்தோன்றும் வகையில் குமரி மாவட்டத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 93 டிகிரிக்கு மேல் வெயில் இருந்து வருகிறது.

மக்கள் அவதி


கோடைகாலமான தற்போது குமரி மாவட்டத்தில் வழக்கத்தைவிட அதிக அளவில் வெயிலின் வெப்பம் இருந்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் நடமாடவே அஞ்சுகிறார்கள். அந்த அளவுக்கு வெயிலின் உஷ்ணம் உள்ளது. பகல் வேளையில் வெளியில் நடந்து சென்றுவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆண்கள், பெண்கள் குடைகளின் உதவியோடு சென்று வருகிறார்கள்.

பகலில் இப்படி என்றால் இரவில் வீட்டுக்குள் எத்தனை மின்விசிறிகள் சுழன்றாலும் தூங்க முடியாத வகையில் வெயிலின் உஷ்ணம் இருந்து வருகிறது. இதனால் படுக்கையில் பலர் வியர்வையால் குளிக்கும் நிலையும் காணப்படுகிறது. இதனால் கோடை வெயிலின் வெட்கையை தாங்கிக்கொள்ள முடியாமல் பொதுமக்கள் ‘கடும்’ அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே பல வீடுகளில் உள்ளவர்கள் இயற்கை காற்றின் உதவியுடனாவது நிம்மதியாக தூங்கலாம் என்ற எண்ணத்தில் வீட்டின் முற்றம் மற்றும் மொட்டை மாடிகளை தேடிச் செல்கிறார்கள்.

நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் தங்களது வீடுகளில் ஏர்கூலர் மற்றும் குளிர்சாதனங்களை (ஏ.சி.) பொருத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

பழச்சாறு விற்பனை


குமரியில் மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெயிலையொட்டி சாலையோரங்களில் குளிர்பானம் மற்றும் பழச்சாறு கடைகள் அதிகமாக பெருகி வருகிறது. இந்த கடைகளில் பழச்சாறு, குளிர்பானங்கள், தர்பூசணி ஜூஸ், இளநீர், நுங்கு– பதனீர் ஆகியவற்றின் விற்பனை சக்கை போடு போடுகிறது. இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோக்கள் போன்ற வாகனங்களில் வருபவர்களும், பாதசாரிகளும் குளிர்பான கடைகள் மற்றும் பழச்சாறு கடைகளை பார்த்ததும் சற்று இளைப்பாறி, குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு, நுங்கு–பதனீர், இளநீர் போன்ற பானங்களை அருந்தி வெயிலின் வெப்பத்தையும், அதனால் ஏற்படும் தாகத்தையும் தணித்துக்கொள்கிறார்கள்.

இந்த வெயிலின் உஷ்ணம் குறைய மழை பெய்யாதா? என்ற ஏக்கம் மாவட்ட மக்கள் அனைவரிடமும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கைதான் கருணை காட்ட வேண்டும்.


Next Story