மணப்பாறையில் தலைமை ஆசிரியை வீட்டில் 14 பவுன் நகை, பணம் திருட்டு


மணப்பாறையில் தலைமை ஆசிரியை வீட்டில் 14 பவுன் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 6 April 2017 9:15 PM GMT)

மணப்பாறையில் தலைமை ஆசிரியை வீட்டில் 14 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறை லெட்சுமிநாராயணன் பகுதியைச் சேர்ந்தவர் சச்சிதானந்தம்(வயது 57). இவர் திண்டுக்கல்லில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலெட்சுமி மணப்பாறை அருகே ஆணையூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் விஜயலெட்சுமி வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்ற போது பின்னால் இருந்த கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

14 பவுன் நகை-பணம்

மேலும் வீட்டின் உள்ளே உள்ள இரண்டு அறைகளிலும் இருந்த இரண்டு பீரோக்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அறை முழுவதுமாக சிதறிக்கிடந்தன. இதையடுத்து அவர் ஒரு அறையில் இருந்த பீரோவை பார்த்த போது அதில் இருந்த 4 செயின், 2 கைச்செயின், 2 மோதிரம் உள்பட 14 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதே போல் மற்றொரு அறையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருந்ததும் தெரியவந்தது.

இது பற்றிய தகவலை சச்சிதானந்தத்திற்கு தெரிவித்தார். அவரும் வந்து பார்த்த பின்னர் இதுபற்றிய தகவலை மணப்பாறை போலீசாருக்கு தெரிவித்தனர்.

தகவலின் பேரில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா, சப் -இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். அடுத்தடுத்து குடியிருப்பு நிறைந்த பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story