உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட சிறுவன் ராணிபென்னூரில் மீட்பு


உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட சிறுவன் ராணிபென்னூரில் மீட்பு
x
தினத்தந்தி 6 April 2017 9:28 PM GMT (Updated: 6 April 2017 9:28 PM GMT)

உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட சிறுவன் ராணிபென்னூரில் மீட்கப்பட்டான்.

உப்பள்ளி,

உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தப்பட்ட சிறுவன் ராணிபென்னூரில் மீட்கப்பட்டான்.

சிறுவன் கடத்தல்

கதக் மாவட்டம் லட்சுமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் கனகே. இவருடைய மகன் மெகபூப் சாப் (வயது 5). கனகே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த மாதம் (மார்ச்) 22–ந்தேதி கனகே உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வெளிப்புற நோயாளி பிரிவில் அனுமதிக்கப்பட்டு கனகே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தந்தையை பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்த சிறுவன் மெகபூப் சாப் கடந்த 25–ந்தேதி ஆஸ்பத்திரியின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கு ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் சிறுவன் மெகபூப் சாப்பை கடத்தி சென்றுவிட்டனர். இந்த காட்சி ஆஸ்பத்திரியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து கனகே, வித்யாநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

ராணிபென்னூரில் மீட்பு

இந்த நிலையில், ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் அருகே குருபகேரி பகுதியில் ஒரு சிறுவன் தனியாக நின்று கொண்டிருப்பதாக ராணிபென்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த சிறுவனை மீட்டு விசாரித்தனர். அப்போது அந்த சிறுவன், லட்சுமேஸ்வரத்தை சேர்ந்த கனகே என்பவரின் மகன் என்றும், உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்டதாகவும் தெரிவித்தான். மேலும் மர்மநபர்கள், ராணிபென்னூர் அருகே குருபகேரி பகுதியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தான். இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை மீட்டு, வித்யாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வித்யாநகர் போலீசார், ராணிபென்னூருக்கு விரைந்து சென்றனர். வித்யாநகர் போலீசாரிடம், ராணிபென்னூர் போலீசார் சிறுவனை ஒப்படைத்தனர்.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

அதன்பின்னர் வித்யாநகர் போலீசார், சிறுவன் மெகபூப் சாப்பை அவனுடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாயமான தங்களது மகன் கிடைத்த மகிழ்ச்சியில் அவனை, உறவினர்களும், பெற்றோரும் கண்ணீர் மல்க வாரி அணைத்துக் கொண்டனர். இதுகுறித்து வித்யாநகர் போலீசார் சிறுவனை கடத்தி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.Next Story