கீதா மகாதேவ பிரசாத் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்


கீதா மகாதேவ பிரசாத் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்
x
தினத்தந்தி 6 April 2017 9:30 PM GMT (Updated: 6 April 2017 9:30 PM GMT)

குண்டலுபேட்டை தொகுதி இடைத்தேர்தலில் கீதா மகாதேவ பிரசாத் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொள்ளேகால்,

குண்டலுபேட்டை தொகுதி இடைத்தேர்தலில் கீதா மகாதேவ பிரசாத் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று முதல்–மந்திரி சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சித்தராமையா பிரசாரம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை, மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு ஆகிய பகுதிகளில் வருகிற 9–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்று ஆளும் காங்கிரஸ் கட்சியினரும், பா.ஜனதா கட்சியினரும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரிகள் நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளில் முகாமிட்டு தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல்–மந்திரி சித்தராமையா, குண்டலுபேட்டைக்கு வந்து காங்கிரஸ் வேட்பாளர் கீதா மகாதேவ பிரசாத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 23 கிராமங்களுக்கு திறந்த வேனில் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் கீதா மகாதேவ பிரசாத்தும் உடன் இருந்தார். அப்போது திறந்த வேனில் இருந்து சித்தராமையா பேசியதாவது:–

மூடநம்பிக்கையில் மூழ்கிய எடியூரப்பா

கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்–மந்திரியாக இருந்தபோது ஒருமுறை கூட சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு வரவில்லை. சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு வந்தால் தனது பதவி பறிபோய் விடுமோ என்ற மூட நம்பிக்கையில் எடியூரப்பா மூழ்கி இருந்தார். இதன் மூலம் அவர், தனக்கு வாக்களித்த சாம்ராஜ்நகர் மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்துள்ளார். தனக்கு ஓட்டுபோட்ட மக்களை ஏமாற்றிய எடியூரப்பா, தூரத்தில் இருந்தே மாவட்டத்தை வளர்ச்சி அடைய செய்வேன் என்று கூறினார். தூரத்தில் இருந்து ஒருபோதும் ஒரு மாவட்டத்தை வளர்ச்சி அடைய செய்ய முடியாது.

சாம்ராஜ்நகருக்கு சென்றால் பதவி பறிபோய் விடும் என்ற மூட நம்பிக்கையில் உள்ள நீங்கள் (எடியூரப்பா) தற்போது ஏன் குண்டலுபேட்டை தொகுதிக்கு வாக்குசேகரிக்க வருகிறீர்கள்?. இந்த தொகுதியும் வேண்டாம், மக்களும் வேண்டாம். ஆனால் அந்த மக்களின் ஓட்டுகள் மட்டும் உங்களுக்கு வேண்டுமா?. நான் முதல்–மந்திரியாக பதவி ஏற்ற பிறகு 6 முறை சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு வந்துள்ளேன். எனக்கு பதவி பறிபோகவில்லை. எடியூரப்பா மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வரவேண்டும்.

அதிக வாக்குகள் வித்தியாசத்தில்...

சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் பொறுப்பு மந்திரியாக இருந்த மகாதேவ பிரசாத்துக்கு, கூடுதல் பொறுப்பாக கவனிக்கும்படி ஹாவேரி மாவட்டத்தை கொடுத்தேன். ஆனால், அவர் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இருந்து தான் வளர்ச்சி பணிகளை தொடங்கினார். அவர் ஹாவேரி பக்கம் போகவே இல்லை. அவர் தனது தொகுதியையும், மாவட்டத்தையும் அவ்வளவு நேசித்து உள்ளார். மகாதேவ பிரசாத் மாவட்டத்தில் எந்த அளவுக்கு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார் என்று அனைவருக்கும் தெரியும்.

ஆதலால், மகாதேவ பிரசாத்தின் இடத்தில் இருந்து மக்கள் சேவை செய்ய வந்துள்ள அவருடைய மனைவி கீதா மகாதேவ பிரசாத்துக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் கீதா மகாதேவ பிரசாத் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா பேசினார்.


Next Story