குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம்


குண்டலுபேட்டை, நஞ்சன்கூடு தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம்
x
தினத்தந்தி 6 April 2017 9:41 PM GMT (Updated: 6 April 2017 9:41 PM GMT)

நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலையில் ஓய்கிறது.

நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலையில் ஓய்கிறது. இதனால் நேற்று இந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது. அதோடு வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு

கர்நாடக சட்ட சபையில் காலியாக உள்ள நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை ஆகிய தொகுதிகளில் நாளை மறுநாள்(ஞாயிற்றுகிழமை) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

நேரடி போட்டி

இந்த தேர்தலில் நஞ்சன்கூடு தொகுதியில் ஆளும் காங்கிரஸ் சார்பில் களளே கேசவமூர்த்தியும், பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி சீனிவாச பிரசாத்தும் போட்டியிடுகின்றனர்.

குண்டலுபேட்டை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மரணம் அடைந்த மந்திரி மகாதேவ பிரசாத்தின் மனைவி கீதா மகாதேவ பிரசாத்தும், பா.ஜனதா சார்பில் நிரஞ்சன்குமாரும் களத்தில் இருக்கிறார்கள். இந்த தேர்தலில் மற்றொரு முக்கிய கட்சியான ஜனதா தளம்(எஸ்) போட்டியிடவில்லை. இதனால் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

வெற்றிக்கனியை பறிக்க...

கர்நாடக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த இடைத்தேர்தல் களத்தில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் வெற்றிக்கனியை பறிக்க காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இது முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு அக்னி பரீட்சையாக கருதப்படுகிறது.

அதனால் ஆளும் காங்கிரஸ் அரசில் உள்ள பெரும்பாலான மந்திரிகள் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கிராம பஞ்சாயத்து அளவில் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மந்திரிகள் வீடு-வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் அந்த தொகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

உச்சக்கட்டம்

அதேபோல் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளில் குவிந்துள்ளனர். அவர்களுக்கும் கிராம பஞ்சாயத்து வாரியாக பகுதிகள் ஒதுக்கப்பட்டு தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரிகள் அனந்தகுமார், சதானந்தகவுடாவும் அந்த தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரு கட்சிகளின் தலைவர்களும் அந்த 2 தொகுதிகளையும் முற்றுகையிட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் இடைத்தேர்தல் நடைபெறும் நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் இடைத்தேர்தலில் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது. அந்த தொகுதிகளில் பகிரங்க பிரசாரம் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியுடன் ஓய்கிறது.

பணப்பட்டுவாடா வீடியோ

ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டனர். சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று நஞ்சன்கூடு தொகுதியில் உள்ள தேவரசனஹள்ளி கிராமத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர் திறந்த வாகனத்தில் தொப்பி அணிந்து சென்றபடி ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். அவர் அதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

எடியூரப்பாவும் அதே தொகுதியில் நேற்று பிரசாரம் செய்து ஓட்டு வேட்டையாடினார். சித்தராமையா, எடியூரப்பா ஆகியோர் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். இதேபோல் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் தீவிர பிரசாரம் செய்தனர். இதற்கிடையே கர்நாடக மகிளா காங்கிரஸ் தலைவி லட்சுமி ஹெப்பால்கர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது போன்ற வீடியோ காட்சிகள் கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை லட்சுமி ஹெப்பால்கர் மறுத்துள்ளார். தான் யாருக்கும் பணம் பட்டுவாடா செய்யவில்லை என்று அவர் கூறினார். இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story