மெரினா காமராஜர் சாலையில் டேங்கர் லாரி மோதி மாணவர் பலி


மெரினா காமராஜர் சாலையில் டேங்கர் லாரி மோதி மாணவர் பலி
x
தினத்தந்தி 6 April 2017 10:25 PM GMT (Updated: 6 April 2017 10:28 PM GMT)

மெரினா காமராஜர் சாலையில் டேங்கர் லாரி மோதி பள்ளி மாணவர் பலியானார். விபத்தில் படுகாயம் அடைந்த அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை,

மெரினா காமராஜர் சாலையில் டேங்கர் லாரி மோதி பள்ளி மாணவர் பலியானார். விபத்தில் படுகாயம் அடைந்த அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டேங்கர் லாரி மோதியது

சென்னை சேத்துப்பட்டு செனாய்நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் விஜய்(வயது 18). இவர் 12–ம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார். இவரது நண்பர் கோகுல்நாத்(17). இவரும் 12–ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு விஜயும், கோகுல்நாத்தும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க சென்றனர். கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு இருவரும் இரவு 10.30 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கண்ணகி சிலை அருகே வந்து கொண்டிருக்கும் போது, துறைமுகத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.

படுகாயம்

இந்த சம்பவத்தில் விஜய், கோகுல்நாத் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை விஜய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கோகுல்நாத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவரான நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த திருமலைக்குமார்(வயது 45) என்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஒரு விபத்து

இதேபோல், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மோதி சென்னை வடபழனியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன்(வயது 24). என்பவர் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பெருமாள்(32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story