வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டம்: தமிழக அரசு இடம் கொடுத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும்


வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டம்: தமிழக அரசு இடம் கொடுத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும்
x
தினத்தந்தி 6 April 2017 10:41 PM GMT (Updated: 6 April 2017 10:41 PM GMT)

வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டத்தை தமிழக அரசு இடம் கொடுத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் என ரெயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டத்தை தமிழக அரசு இடம் கொடுத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் என ரெயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

2016–17–ம் நிதி ஆண்டில் ரெயில்வே துறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை கோட்ட மேலாளர் அனுபம்சர்மா நேற்று பேட்டியளித்த போது கூறியதாவது:–

சென்டிரல்–கூடூர்

கடந்த நிதி ஆண்டில் 822.1 கோடி பயணிகள் இந்தியா முழுவதும் ரெயிலில் பயணம் செய்துள்ளனர். இதனால் ரெயில்வேக்கு கடந்த ஆண்டை விட ரூ.2 ஆயிரம் கோடி அதிக வருவாய் கிடைத்துள்ளது.

சென்னையில் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்த சென்னை சென்டிரல்–கூடூர் இடையேயான வழித்தடத்தில் உள்ள ஆளில்லா ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டுள்ளன. சென்னை சென்டிரலில் சரக்கு மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை கோட்டத்தில் உள்ள 100 ரெயில் நிலையங்களில் கட்டண கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தாம்பரம், பல்லாவரம், கூடுவாஞ்சேரி, வண்டலூர், பரங்கிமலை, வேப்பம்பட்டு, திருவள்ளூர் ஆகிய ரெயில் நிலையங்களில் புதிய நடைபாதை அமைக்க ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. சென்டிரல் ரெயில் நிலையத்தில் 6–வது நடைமேடையில் இருந்த பயணிகள் காத்திருப்பு மையம் மாற்றப்பட்டு, கூடுதலாக 5 இடங்களில் அமைக்கப்பட்டது.

2,300 ரெயில் பெட்டிகள்

நெமிலிச்சேரி ரெயில் நிலையத்தில் பயணிகள் நடப்பதற்கான சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்துள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் 2 லிப்ட் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை கோட்டத்தில் உள்ள 14 முக்கிய ரெயில் நிலையங்களில் ஜி.பி.எஸ். வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, 216 எல்.இ.டி. சிக்னல் போஸ்ட்கள், 22 குளிர்ந்த குடிநீர் மையங்கள், 133 இருக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பாண்டியன் எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் உள்ள பெட்டிகள் அனைத்தும் புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்.ஹெச்.பி. பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையின் மூலம் 2,300 பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சென்னை கோட்டம் வழியாக பிற கோட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

வேளச்சேரி–பரங்கிமலை

சென்டிரல், எழும்பூர், தாம்பரம், பேசின்பிரிட்ஜ், மூர்மார்க்கெட் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் புதிதாக 124 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரெயில் நிலையங்களில் ஏற்கனவே 151 கேமராக்கள் செயல்படும் நிலையில் இருந்தன. அதேபோல் காட்பாடி ரெயில் நிலையத்தில் 42 புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டு ரெயில் நிலையம் முழுவதையும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெண் பயணிகள் பாதுகாப்புக்காக மகளிர் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆபத்தான 500 இடங்களை கண்டறிந்து எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. முக்கிய ரெயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரெயில்வே பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் 65 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளன.

தமிழக அரசு இடம் கொடுத்தால் மட்டுமே வேளச்சேரி–பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் திட்டத்தை செயல்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story