மூலைக்கரைப்பட்டி அருகே விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை


மூலைக்கரைப்பட்டி அருகே விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 7 April 2017 7:30 PM GMT (Updated: 7 April 2017 2:00 PM GMT)

மூலைக்கரைப்பட்டி அருகே விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இட்டமொழி,

மூலைக்கரைப்பட்டி அருகே விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள்நகரை சேர்ந்தவர் சங்கரன் (வயது 75). அவருடைய மனைவி பார்வதி (65). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கணவன்– மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கரன் கடந்த 10 வருடங்களாக மனைவியை விட்டு பிரிந்து தனக்கு சொந்தமான சிந்தாமணி சாலையில் உள்ள தோட்டத்தில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தார்.

மூத்த மகன் கணேசன் மட்டும் அவ்வப்போது தோட்டத்துக்கு வந்து தந்தையை பார்த்து வந்தார். மேலும் கணேசன் தான் வளர்த்து வரும் மாடுகளையும் தனது தந்தையின் தோட்டத்திலேயே கட்டி வைத்திருந்தார். மேலும் தோட்டத்தில் உள்ள வேலைகளையும் செய்து கொண்டு மேற்பார்வை செய்து வந்தார்.

இந்தநிலையில் தோட்டத்தில் உள்ள ஒரு மின்மோட்டாரை கணேசன் சரிசெய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சங்கரன், மோட்டாரை ஏன் சரிசெய்தாய்? என கேட்டு மகனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த கணேசன், தோட்டத்தில் கட்டியிருந்த தனது மாடுகளையும் அவிழ்த்து கூட்டிச் சென்றுவிட்டார்.

வி‌ஷம் குடித்து தற்கொலை

அதன் பின்னர் கடந்த சில நாட்களாக கணேசன் தோட்டத்துக்கு வரவில்லை. வந்து சென்ற தனது மகனையும் விரட்டி விட்டோமே என்ற மனவருத்தத்தில் இருந்த சங்கரன் நேற்று முன்தினம் காலையில் தோட்டத்தில் வைத்து வி‌ஷம் குடித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சங்கரன் நேற்று முன்தினம் இரவிலேயே இறந்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story