நெல்லையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முயன்றபோது அதிகாரிகள் முன்னிலையில் மீன் வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


நெல்லையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முயன்றபோது அதிகாரிகள் முன்னிலையில் மீன் வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 April 2017 8:30 PM GMT (Updated: 7 April 2017 4:01 PM GMT)

நெல்லையில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முயன்றபோது அதிகாரிகள் முன்னிலையில் மீன் வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லையில், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முயன்றபோது அதிகாரிகள் முன்னிலையில் மீன் வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெல்லை மேலப்பாளையத்தில், நெல்லை மாநகராட்சி மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு மீன் வியாபாரிகள் மாநகராட்சிக்கு பணம் செலுத்தி கடைகள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிலர் மேலப்பாளையத்தில் இருந்து மேலநத்தம் செல்லும் ரோட்டையொட்டி திருவள்ளுவர் தெருவில் அனுமதியின்றி மீன் கடைகளை நடத்தி வந்தனர். அங்குள்ள தெருக்களையும் ஆக்கிரமித்து இருந்தனர். இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 10–க்கும் மேற்பட்ட கடைகளில் தினமும் மீன் வியாபாரம் செய்யப்பட்டு வந்தது.

இதற்கு மாநகராட்சி மீன் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கில் ரோட்டோர ஆக்கிரமிப்பு மீன் கடைகளை அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

மீன் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

இதையடுத்து மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் அனிதா, உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி ஆகியோர் நேற்று மாநகராட்சி ஊழியர்களுடன் திருவள்ளுவர் தெருவுக்கு சென்றனர். அங்கிருந்த ஆக்கிரமிப்பு மீன்கடைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சவரிமுத்து என்ற மீன் வியாபாரி திடீரென்று மண்எண்ணெய் கேனுடன் அங்கு வந்தார். அவர் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சவரிமுத்துவை மடக்கிப்பிடித்து தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story