வெம்பக்கோட்டை பகுதியில் திறக்கப்படாத கிராம சேவை மையங்கள்


வெம்பக்கோட்டை பகுதியில் திறக்கப்படாத கிராம சேவை மையங்கள்
x
தினத்தந்தி 7 April 2017 6:28 PM GMT (Updated: 7 April 2017 6:28 PM GMT)

வெம்பக்கோட்டை பகுதியில் கட்டப்பட்டுள்ள கிராம சேவை மையங்கள் திறக்கப்படாமல் வீணாக கிடக்கின்றன.

தாயில்பட்டி,

வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றுவோர் தங்களுடைய மண் வெட்டிகள், கடப்பாரை, தட்டுகள் போன்றவற்றை வைத்துச்செல்லவும், செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஆலோசனை பெறவும், ஆன்லைனில் ஊதியம் பெற்று பட்டுவாடா செய்யவும் அலுவலகமாக கிராம சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பிறப்பு இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவையும் இங்கிருந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு கிராமங்களில் தலா 13 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் கணஞ்சாம்பட்டி, சூரார்பட்டி, பேர்நாயக்கன்பட்டி, கோட்டைபட்டி, பனையடிப்பட்டி, தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, முத்துசாமிபுரம், கங்கரக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் கிராமசேவை மையங்கள் புதிதாக கட்டப்பட்டன. 50-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ஆலோசனை நடத்தக்கூடிய அளவுக்கு வசதியாக இந்த மையங்கள் அமைந்துள்ளன. புதுவாழ்வு திட்டப்பணியாளர்களுக்காக இங்கு தனியாக அறை அமைக்கப்பட்டது.

திறக்கப்படவில்லை

இத்தனை வசதியுடன் கட்டிமுடிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் அவை இன்னமும் திறக்கப்படாமல் கிடக்கின்றன. மடத்துப்பட்டி, டி.கரிசல்குளம், சிப்பிப்பாறை ஆகிய ஊராட்சிகளில் கட்டிட பணிகள் முடிவடையாமல் கிடக்கின்றன. அதிகாரிகள் இதனை திறக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகள் வசம் இல்லாததால் இதற்காக யாரும் குரல் கொடுக்காமல் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறக்கப்படாமலேயே பாழ்பட்டு வருவதாக இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் தங்களது உபகரணங்களை வைத்திட இடம் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

Next Story