பெங்களூருவில் இந்த மாதம் முழுஅளவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு அறிவிப்பு


பெங்களூருவில் இந்த மாதம் முழுஅளவில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கும் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு அறிவிப்பு
x
தினத்தந்தி 2 May 2017 11:45 PM GMT (Updated: 2 May 2017 10:23 PM GMT)

“பெங்களூருவில் முதல்கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நிறைவடைந்து விட்டது. போக்குவரத்து சேவை இந்த மாதம் தொடங்கப்படும்” என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு அறிவித்தார்.

பெங்களூரு,

தூய்மை இந்தியா திட்டம், சீர்மிகு நகரம்(ஸ்மார்ட் சிட்டி), அம்ருத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு இந்த ஆய்வு கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், நகர வளர்ச்சித்துறை மந்திரி ரோஷன் பெய்க், நகரசபை நிர்வாகத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே, வீட்டு வசதித்துறை மந்திரி கிருஷ்ணப்பா மற்றும் கர்நாடக அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் முடிந்த பிறகு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

178 பணிகளும்...

மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் நகரங்களில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். இந்த திட்டத்தை கர்நாடகத்தில் செயல்படுத்த ரூ.4,953 கோடி நிதி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூ.2,319 கோடியை மத்திய அரசு வழங்கும்.

மாநில அரசுகள் இந்த திட்டங்களை செயல்படுத்த திட்ட அறிக்கையை தயாரிப்பது, அவற்றுக்கு ஒப்புதல் வழங்குவது போன்ற பணிகளை விரைவாக செய்ய வேண்டும். கர்நாடக அரசு வருகிற நவம்பர் மாதத்திற்குள் பணிகளை தொடங்க வேண்டும். மொத்தம் உள்ள 178 பணிகளும் 2020-ம் ஆண்டுக்குள் முழுமையாக முடிக்கப்படும். இதில் 50 சதவீத பணிகள் 2018-ம் ஆண்டுக்குள் நிறைவடையும்.

திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக...

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறை கட்ட கர்நாடக அரசு வழங்கும் மானியம் ரூ.11 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தற்போது மைசூரு, மங்களூரு, உடுப்பி ஆகியவை திறந்தவெளி கழிவறைகள் இல்லாத நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மொத்தம் 276 நகரங்கள் இருக்கின்றன. கர்நாடக அரசு மானியத்தை உயர்த்தி இருப்பதால் தனிநபர் கழிவறைகள் கட்ட மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

2018-ம் ஆண்டுக்குள் கர்நாடகம் திறந்தவெளி கழிவறை இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்று கர்நாடக அரசு உறுதியளித்து உள்ளது. முக்கிய நகரமான பெங்களூரு வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதிக்குள் திறந்தவெளி கழிவறை இல்லாத நகரமாக மாறும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பெங்களூரு கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. குப்பையில் இருந்து உரம் தயாரிக்க 8 மையங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4 மையங்கள் செயல்படாமல் உள்ளது. மேலும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க 2 மையங்கள் அமைக்கும் பணிகளை மாநில அரசு விரைவுபடுத்த வேண்டும்.

குப்பையில் இருந்து மின்சாரம்

அரசு-தனியார் பங்களிப்பில் இந்த திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும். அம்ருத் திட்டத்தின் கீழ் 15 நகரங்களில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் மையங்களை மாநில அரசு அமைக்க வேண்டும். அதேபோல் மைசூரு மற்றும் உப்பள்ளி ஆகிய நகரங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மையங்களை அமைக்க வேண்டும்.

அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பணி தொடங்குகிறது. இதில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து நகரங்களும் இணைய வேண்டும். சீர்மிகு நகரம்(ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் இருந்து பெலகாவி, தாவணகெரே, உப்பள்ளி-தார்வார், மங்களூரு, சிவமொக்கா, துமகூரு ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 3-வது சுற்று திட்டத்தில் பெங்களூரு சேர்க்கப்படும்.

முழுமையாக நிர்வகிக்கும் அதிகாரம்

பெலகாவி மற்றும் தாவணகெரே நகரங்களுக்கு தலா ரூ.200 கோடி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இன்று(அதாவது நேற்று) மீதமுள்ள நகரங்களுக்கு தலா ரூ.107 கோடி வீதம் நிதியை வழங்கியுள்ளேன். இந்த திட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த திட்ட செயல்பாட்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 10 திட்ட பணிகளுக்கு திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கர்நாடகத்தில் திட்ட செயல்பாட்டு சிறப்பு குழுவுக்கு ரூ.10 கோடி வரை உள்ள திட்டங்களை அமல்படுத்த மட்டுமே அதிகாரம் உள்ளது. அந்த குழுவுக்கு நிதியை கையாளும் அதிகாரம் வேண்டும் என்று கேட்கப்படுகிறது. எனவே மாநில அரசு அந்த குழுவுக்கு நிதியை முழுமையாக நிர்வகிக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும்.

மெட்ரோ ரெயில் திட்டம்

சீர்மிகு நகர திட்ட பணிகளுக்கு டெண்டர் விடும் பணிகள் அடுத்த 3 மாதங்களில் நிறைவடையும். பாரம்பரியம்மிக்க நகரங்களை அவற்றின் உருமாறாமல் மேம்படுத்த ‘ஹரிடே‘ என்ற பெயரில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடகத்தில் இருந்து பதாமி நகரம் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக ரூ.3.73 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

42.3 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பெங்களூரு முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முழுமையாக முடிந்துவிட்டது. ஏற்கனவே 33 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் ஓடுகின்றன. தற்போது சிக்பேட்டையில் உள்ள சுரங்க ரெயில் நிலைய கட்டிடத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நடக்கின்றன. நாகசந்திரா முதல் எலச்சேனஹள்ளி வரையிலான பாதையில் சோதனை ரெயில் ஓட்டம் நடக்கிறது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்து விரைவில் தடையில்லா சான்று வழங்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.

மெட்ரோ ரெயில் சேவை

எனவே இந்த மாத இறுதிக்குள் முதல் கட்ட மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கப்படும். முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.7 ஆயிரத்து 110 கோடி வழங்கியுள்ளது. பெங்களூருவில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் 72 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதை அமைக்கப்படுகிறது. இந்த திட்ட செலவு ரூ.26 ஆயிரத்து 405 கோடி ஆகும். 2020-ம் ஆண்டுக்குள் இந்த பணிகள் முடிவடையும்.

மேலும் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு சில்க்போர்டு-கே.ஆர்.புரம் இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.4,200 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மதிப்பு சேகரிப்பு நிதி மற்றும் பிற புதுமையான நிதி ஆதாரங்கள் மூலம் நிதி திரட்டப்படும். மத்திய அரசு புதிதாக மெட்ரோ ரெயில் கொள்கையை உருவாக்குகிறது.

500 கிலோ மீட்டர் நீளத்திற்கு...

போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி குறித்த தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் தொடங்கப்படும் அனைத்து மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கும் இவற்றின் அனுமதியை பெற வேண்டும். நாடு முழுவதும் 325 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் ஓடுகிறது. மேலும் 500 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

முன்னதாக சீர்மிகு நகரம் உள்பட பல்வேறு திட்டங்களுக்காக கர்நாடகத்திற்கு நிதி விடுவிப்புக்கான கடிதங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசின் துறை மந்திரிகளிடம், வெங்கையா நாயுடு வழங்கினார்.



Next Story