ராமேசுவரம் விடுதியில் கழுத்தை அறுத்து பெண் கொலை: தப்பி ஓடிய கணவர் செல்போன் சிக்னலால் சிக்கினார்


ராமேசுவரம் விடுதியில் கழுத்தை அறுத்து பெண் கொலை: தப்பி ஓடிய கணவர் செல்போன் சிக்னலால் சிக்கினார்
x
தினத்தந்தி 3 May 2017 11:00 PM GMT (Updated: 3 May 2017 6:18 PM GMT)

ராமேசுவரம் விடுதியில் கழுத்தை அறுத்து பெண் கொலைசெய்யப்பட்டது தொடர்பாக அவருடைய கணவர் செல்போன் சிக்னல் மூலம் போலீசாரிடம் சிக்கினார்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கடந்த மாதம் 26-ந்தேதி ஒரு குழந்தையுடன் கணவன்-மனைவி அறை எடுத்து தங்கியிருந்தனர். வெகுநேரமாகியும் அந்த அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீசார் அங்கு வந்து பார்த்த போது கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது கணவர் குழந்தையுடன் மாயமாகி விட்டார்.

இதுகுறித்து ராமேசுவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராமலிங்கம் ஆலோசனையின்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமேசுவரம் ரெத்தினவேல், உச்சிப்புளி கோவிந்தன், ஏட்டு காளிமுத்து ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார், மாயமான வாலிபர் விடுதியில் கொடுத்த செல்போன் எண் மூலம், செல்போன் சிக்னலை வைத்து ஒடிசா மாநிலத்துக்கு சென்றனர். அங்கு பட்டுராட் மாவட்டம் டில்லோ கிராமத்தில் உள்ள அவரது வீட்டை கண்டுபிடித்து அங்கு போலீசார் சென்றனர். அப்போது போலீசார் வருவதை அறிந்து அவர், தப்பி ஓடி விட்டார். பின்னர் அவரது நண்பர்கள் உதவியுடன் போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவரது பெயர் திலிப் (வயது 38) என்பதும், கொலை செய்யப்பட்ட அவருடைய மனைவி பெயர் சபிதாராணி என்பதும் தெரியவந்தது. பின்னர் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வாலிபர் திலிப்பிற்கும், பக்கத்து வீட்டில் வசித்த கூனி(35) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் இருந்துவந்தது தெரிந்தது.

இதை அறிந்த சபிதாராணி கணவரை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களது பழக்கம் தொடர்ந்து கொண்டே இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த சபிதாராணி அவளுடன் பழக்கத்தை கைவிடவில்லை என்றால் பிரிந்து சென்று விடுவேன் என்று கூறினாராம்.

இதையடுத்து மனைவியை கொலை செய்ய வாலிபர் திலிப் திட்டமிட்டுள்ளார்.

கைது

இதன்படி தனது மனைவியிடம், நாம் குடும்பத்துடன் ராமேசுவரத்துக்கு சென்று கடலில் புனிதநீராடுவோம். பின்னர் கூனியுடனான பழக்கத்தை விட்டுவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் குழந்தையுடன் ராமேசுவரத்துக்கு ரெயிலில் வந்துள்ளனர்.

இங்கு வந்து அறை எடுத்து தங்கியிருந்தபோது தான் ஏற்கனவே திட்டமிட்டபடி மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு குழந்தையுடன் ஊருக்கு திரும்பி சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து ராமேசுவரம் அழைத்து வந்துகொண்டிருக்கின்றனர்.

சம்பவம் நடந்த ஒரு வாரத்திலேயே துரிதமாக செயல்பட்டு கொலையாளியை கைது செய்த போலீசாரை பொதுமக்களும், போலீஸ் உயர் அதிகாரிகளும் பாராட்டினர்.

Next Story