மாவட்டம் முழுவதும் கண்மாய், வாய்க்கால்களில் மண் அள்ள அனுமதி


மாவட்டம் முழுவதும் கண்மாய், வாய்க்கால்களில் மண் அள்ள அனுமதி
x
தினத்தந்தி 3 May 2017 10:30 PM GMT (Updated: 3 May 2017 6:55 PM GMT)

மாவட்டம் முழுவதும் கண்மாய், வாய்க்கால்களில் மண் அள்ள அனுமதி கலெக்டர் அறிவிப்பு

தேனி,

மாவட்டம் முழுவதும் கண்மாய்கள், வாய்க்கால்களில் இலவசமாக மண்அள்ள அனுமதி அளிக்கப்படுவதாகவும், அதனை பெறுவதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கலெக்டர் வெங்கடாசலம் அறிவித்து உள்ளார்.

தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இலவச அனுமதி

தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு புறம்போக்கு ஊருணி, ஏரி, கண்மாய், வாய்க்கால் மற்றும் கால்வாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் மண், சவுடு மண், கிராவல் மண் ஆகியவற்றை விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.

வேளாண்மை பொறியியல் துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் பரிந்துரையின்படி இதற்கான அனுமதியை பெறலாம். நஞ்சை நிலமாக இருந்தால் 25 டிராக்டர் லோடும், புஞ்சையாக இருந்தால் 30 டிராக்டர் லோடும் ஒரு விவசாயி பெறலாம். சொந்த தேவைக்கு என்றால் 10 டிராக்டர் லோடு மண் எடுத்துக் கொள்ளலாம். மண்பாண்டம் செய்யும் குயவர்கள் 20 டிராக்டர் லோடு எடுத்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கலாம்

மண் அள்ளுவதற்கான அனுமதி இலவசம். விவசாயிகள் மண் எடுப்பதற்கு ஆகும் செலவை மட்டும் செலுத்த வேண்டும். வாகனங்களில் ஏற்ற எந்திரம் மற்றும் மண் அள்ள ஆகும் செலவாக ஒரு கனமீட்டருக்கு ரூ.35.20 வீதம், ஒரு டிராக்டர் லோடுக்கு ரூ.106 என செலுத்த வேண்டும். இதற்கு விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் இலவச அனுமதி பெறலாம்.

எனவே ஏரி, கண்மாய், ஊருணி, வாய்க்கால், கால்வாய்களில் விவசாயிகள் இலவசமாக மண் அள்ளும் அனுமதி பெற மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இடைத்தரகர்கள் தொல்லைக்கு தீர்வு காணப்படுமா?

தேனி மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் விவசாயிகள் இலவசமாக மண் அள்ளிக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றும், தேவையான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அறிவித்தார். இதற்காக சுமார் 40 குளங்களின் பட்டியலும் அரசிதழில் வெளியிடப்பட்டது.

 ஆனால், இதன் மூலம் விவசாயிகள் யாரும் நேரடியாக பயன்பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது. மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் உள்ள நிலையில், 5 விவசாயிகளுக்கு கூட இலவச அனுமதி கிடைக்கவில்லை. கனிமவளத்துறை அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வரும் விவசாயிகள் இடைத்தரகர்கள் தொல்லையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களிலும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். கண்மாய்களில் இலவசமாக மண் அள்ளும் அனுமதி மூலம் விவசாயிகள் பயன்பெறும் அதே நேரத்தில் கண்மாய்களும் தூர்வாரப்படும். அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

 ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்பது போல் இந்த அனுமதியை விவசாயிகள் பெற்று பயன்பெற வேண்டும். அதற்கு இடைத்தரகர்கள் தொல்லைக்கும் மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும். இதுபோன்ற அனுமதிக்கு விண்ணப்பித்தல், அனுமதி வழங்குதல், மண் எடுத்தல் போன்றவற்றை கண்காணிக்க ரகசிய கண்காணிப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.


Next Story