ஆண்டிப்பட்டி அருகே வினோத வழிபாடு: துடைப்பத்தால் உறவினர்களை அடித்து தோஷம் நீக்கும் பக்தர்கள்


ஆண்டிப்பட்டி அருகே வினோத வழிபாடு: துடைப்பத்தால் உறவினர்களை அடித்து தோஷம் நீக்கும் பக்தர்கள்
x
தினத்தந்தி 3 May 2017 11:30 PM GMT (Updated: 3 May 2017 6:55 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, உறவினர்களை துடைப்பத்தால் அடித்து பக்தர்கள் வினோத வழிபாடு நடத்தினர்.

ஆண்டிப்பட்டி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 3 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில், முதல் 2 நாட்களில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுவர். முளைப்பாரி, தீச்சட்டி எடுப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

3-வது நாள் விழாவில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் மாமன், மைத்துனர்கள் மீது துடைப்பத்தால் அடிக்கும் நிகழ்ச்சி நடை பெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது. திருவிழாவின் 3-ம் நாளான நேற்று, அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் மாமன், மைத்துனர் களை துடைப்பத்தால் அடிக்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது.

துடைப்பத்தால் அடித்து...

துடைப்பத்தால் உறவினர் களை அடிப்பதற்கு முன்பு அதனை சாக்கடை நீரிலும், சேறு மற்றும் சகதியிலும் போட்டனர். பின்னர் அதனை எடுத்து தங்கள் உறவினர்களை அடித்தனர். இதேபோல் அவர்களும், தங்களை அடிக்க வருபவர்களை தாங்கள் வைத்திருக்கும் துடைப்பத்தால் அடித்தனர். ஒரு சிலர் சேற்றிலும், சகதியிலும் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களை துடைப்பத்தால் அடிக்கும்படி கூறுவார்கள்.

உடனே அவர்களுடைய உறவினர்களும் துடைப்பத்துடன் ஓடிச்சென்று அவர்களை அடிப்பார்கள். இந்த வினோத நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிட்டு ரசிப்பார்கள். துடைப்பத்தை சாக் கடையில் நனைத்து அடிப்பதால், அடிபடுபவர்கள் மீதுள்ள கண்திருஷ்டி, பில்லி, சூனியம் உள்ளிட்டவைகள் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி

மேலும் இந்த வழிபாட்டு முறையால் அவர்களின் தோஷங்களும் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் என்பதும் மறவபட்டி மக்களின் நம்பிக்கையாகும். இதைத்தவிர நீண்டநாட்கள் பிரிந்து வாழும் உறவினர்கள் கூட, இந்த திருவிழாவின் போது துடைப்பத்தால் அடிபட்டு மீண்டும் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்துகொள்வார்கள் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மறவபட்டி கிராமத்தை சேர்ந்தவர்களை மட்டுமே துடைப்பத்தால் பிறர் அடிப்பார்கள். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திருவிழாவை காண வருபவர்களை அவர்கள் அடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story